நாட்டில் நிலவும் திண்மக்கழிவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரிக்குமாறும் இந்த விடயத்தில் மத்திய அதிகாரசபைக்கு அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (21) அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தப் பணிப்புரையை விடுத்தார்.
மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும்வரை ஒவ்வொரு வாரமும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.