ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டி கட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் கட்சியின் போசகர்களான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெறும் மே தினக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டம் அரசியல் நோக்கங்களை கொண்டிருக்கக் கூடாது எனவும், அது தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுறுத்தியவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு, கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் விசேட இடம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.