புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கையர் ஒருவர் தன்னைத் தானே சித்திரவதை செய்து கொண்டுள்ளார். 35 வயதான குறித்த இலங்கையர், பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூடான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறித்த நபர் தன்னைத் தானே தாக்கிவிட்டு இலங்கை அரச படையினர் துன்புறுத்தியதாகத் தெரிவித்து இவர் புகலிடம் கோரியுள்ளார் எனவும் அவர் தமக்கு புகலிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான காயங்கள் செயற்கையான அடிப்படையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த இலங்கையர் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்திருந்தார். 2007ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல் தொடர்பில் தம்மை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்தாகத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தம்மை இலங்கைப் படையினர் சித்திரவதை செய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 22, 000 சொற்களைக் கொண்டு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சித்திரவதைச் சம்பவங்கள் செயற்கையானது என தெரிவித்து பிரித்தானிய நீதவான் இந்த மனுவை நிராகரித்துள்ளார். இந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு ஒன்றை மீளவும் செய்ய உள்ளாரா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.