இறக்காமத்தில் முஸ்லிங்களின் காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
கிழக்கின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக காணிகள் கையகப்படுத்தப்படுவதையும் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இது நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறக்காமத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து முதலமைச்சரிடம் இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் மகஜர் ஒன்றை கையளித்த போதே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,
மேலும் முஸ்லிங்களின் பாரம்பரியக் காணிகள் மீதான அத்துமீறல்கள் நல்லாட்சிக்கு நம்பி வாக்களித்த முஸ்லிங்கள் மத்தியில் பாரிய அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது எனவும் சில இனவாதிகள் திட்டமிட்ட வகையில் நாட்டை தொடர்ந்தும் பின்னோக்கிக் கொண்டு செல்லும் வகையில் இனங்களிடையே விரிசல்களை ஏற்படுத்தி முரண்பாடுகளை தோற்றுவிக்க முனைகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்லின் மக்கள் வாழும் இந்த நாட்டில் எல்லா இனத்தினரும் தமது இடங்களில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது,அந்த உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து அது தொடர்பில் நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான உரிமை நமக்கு இருக்கின்றது. நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் மாயக்கல்லி மலையில் இவ்வாறு அத்துமீறுவது நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவது யாராக இருந்தாலும் தராதரம் பாராரது கைது செய்யப்பட வேண்டும்.ஆனால் இங்கு நீதித்துறையையே கேள்விக்குட்படுத்துபவர்கள் மீது சிறு எச்சரிக்கை கூட விடுக்கப்படாமை நீதித்துறையின் மீது மக்களுக்கு சந்தேகங்களை தோற்றுவிக்கஏதுவாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும் எனத் தெரிவித்த அவர் எமது பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு எமது எதிர்கால இருப்பையே கேள்விக்குட்படுத்தும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.