அக்கினிச் சிறகுகள் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . அக்கினிச் சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாக வடக்கில் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போட்டியை கடந்த சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்தநிலையில் அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மனிடம் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினர் சுற்றுப்போட்டிக்கு நிதி கிடைத்தமை தொடர்பிலும் இதில், தமிழ் புலம் பெயர்ந்தோர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா எனவும் சுற்றுப்போட்டியில் நினைவேந்தல் தீபம் ஏற்றப்படுமா எனவும் வினவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளரிடமும் தொலைபேசி மூலமாகக் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . வவுனியா ஜோசப் முகாமிலிருந்து பேசுவதாகக் தெரிவித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழ் புலம்பெயர்ந்தோர்கள் சம்பந்தப்படாவிட்டால் சுற்றுப்போட்டி நடத்த அனுமதிக்கப்படும் என புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.