இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோர் இன்றையதினம் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தினகரனுக்கு பிணை வழங்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் குறித்த வழக்கு தொடர்பாக சென்னை, கொச்சி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இருவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவர்களை பொலிஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்; மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது
Apr 25, 2017 @ 20:08
இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கிய நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
சுகேஷிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார்.மேலும் இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த சனிக்கிழமை முதல் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என டிடிவி.தினகரன் கூறினார். இநத்நிலையில் திங்கட்கிழமை 4 வது நாளாக பலமணி நேரம் விசாரணை நடைபெற்றபோது சுகேஷ் மற்றும் டிடிவி தினகரனை ஒரே அறையில் வைத்து நேருக்கு நேர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனை த்தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்தனா ஆகியோரை செவ்வாயக்கிழமை நள்ளிரவில் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.