Home இலங்கை சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்:-

சிங்கள தேசம் இனியாவது தந்தை செல்வாவை புரிந்துகொள்ளுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்:-

by admin

இன்றைக்கு தந்தை செல்வாவின் நினைவுநாள். தந்தை செல்வா காலமாகி முப்பத்தொன்பது வருடங்கள் ஆகிவிட்டது. 1977 ஏப்ரல் 26 அன்று தந்தை செல்வா காலமானார். இன்னும் ஒரு வருடத்தில் அவர் இறந்து நான்கு தசாப்தங்கள்.
தந்தை செல்வா என்று ஈழத் தமிழ் மக்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை  செல்வநாயகம் ஒரு அரசியல்வாதி மாத்திரமல்ல. அவர் பிரசித்தமான ஒரு வழக்கறிஞரும் ஆவார். யாழ்ப்பாணம் தொல்புரத்தை பூர்வீகமாகக்  கொண்ட செல்வநாயகத்தின் தந்தை ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் மலேசியாவுக்கு புலம்பெயர்ந்த காலத்தில் தந்தை செல்வா மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார்.

அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த தந்தை செல்வா, சிலோனின் சுதந்திரத்தின் பின்னர் அரசாங்கத்தில் இணைவது, இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை பறித்தல் போன்ற காரணங்களால் அகில இலங்கை காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி இலங்கை தமிழரசுகச் கட்சியை அமைத்தார். தந்தை செல்வா இலங்கையில் எழுந்த இனப்பிரச்சினைக்கு சுயாட்சி முறையினை தீர்வாகக் கோரினார்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகள் பேரினவாத தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. தமிழர்களின் தாயகத்தில் பலவந்த குடியேற்றங்கள் தொடங்கப்பட்டன. அத்துடன் தனிச் சிங்களச் சட்டம் போன்றஅணுகுமுறைகள் தமிழ் மக்களை மிகவும் பாதித்தன. தமிழ் மக்கள் அரசியல் உரிமையற்றவர்களாக, அரசியல் அதிகாரம் இழந்தவர்களாக மாற்றப்பட்டனர். இக் காலகட்டத்தில் தந்தை செல்வநாயகம் ஜனநாயக ரீதியலான போராட்டத்தை தொடங்கினார். ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஜனநாயக ரீதியாக தீவிரமாகக் குரல் கொடுத்தார்.

சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான எதிர்ப்பை கண்டு அதனை சமாதானப்படுத்தும் விதமாக தந்தை செல்வநாயகத்துடன் முன்னாள் பிரதமர் பண்டார நாயக்க ஒப்பந்தத்தில் ஈடுபட்டார். அது பண்டா – செல்வா ஒப்பந்தம் எனப்டுகின்றது. இதனை தீவிர இனவாதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் பௌத்த பிக்குகளின் கடுமையான பேரினவாத எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தந்தை செல்வாவின் தொடர் போராட்டத்தை அடுத்து டட்லி – செல்வா ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தமிழர்களுடன் செய்யப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் சிங்களப் பேரினவாதிகள் கிழித்தெறிய வைத்தனர்.

ஆனாலும் தந்தை செல்வாவின் அறப்போராட்டங்கள் அன்றைய காலத்து சிங்களத் தலைவர்களை சுயாட்சிமுறையை அங்கீகரிக்கத் தூண்டின. குறிப்பாக பண்டாரநாயக்க இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையினை ஏற்றுக்கொண்டார்.  அன்றைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று, ஆயுதப் போராட்டம் உருவாகியிருக்காது என்றும், தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தியிருக்க மாட்டார்கள் என்றும் பிரபாகரன் தோன்றியிருக்க மாட்டார் என்றும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்.

அது மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மகிழச்சியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ் மக்களின் உரிமையை அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் இன்னொரு யுத்தத்தை தடுக்க இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன  குறிப்பிடுகிறார். இலங்கையில் ஆள்பவர்கள் அல்லது தலைவர்கள் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தை வாய்ப்பேச்சளவில் ஏற்றுக்கொண்டாலும் பேரினவாதிகளை கடந்து நடைமுறைப்படுத்தாததே வரலாறு. இதனால் இறுதியில் அவர்களும் பேரினவாதிகளாகின்றனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மேலும் மேலும் ஒடுக்கி அழிக்கப்பட்டார்கள்.

தந்தை செல்வா அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட  ஒப்பந்தங்கள் யாவும் தோல்வியில் முடிந்ததையடுத்து 1976இல் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணிஎன்ற பெயரில் தனித் தமிழீழத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வந்தன. வடகிழக்கு பாரம்பரிய தாயகத்தில் இறைமை  கொண்ட தன்னாட்சி அரசு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடத்தில் தந்தை செல்வா காலமானார். அவரது இழப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு பேரிழப்பு. அறப்போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த தலைமுறை ஆயுதம் ஏந்திப் போராடும் என்று  தந்தை செல்வா குறிப்பிட்டார்.

அதைப்போலவே அதற்குப் பின் வந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் ஈழத் தமிழ் மக்களின் உரிமை வேண்டி ஆயுதம் ஏந்தினர். அதற்குப் பின் வந்த கால தமிழ் மிதவாத அரசியல் சூழலும் ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்தியத. தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றின் ஊடாக சர்வதேச கவனத்தை ஈர்த்து இலங்கை அரசுடன் ஒரு இராணுவ பலத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தமிழ் மக்களின் உரிமையை வழங்காமல் அந்த  ஆயுதப் போராட்டத்தை எவ்வாறு அழிப்பது என்று இலங்கை அரசு தனது தீவிரச் செயற்பாடுகளைத் தொடர்ந்தது.

ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்காக மாபெரும் இனப்படுகொலை ஒன்றை நிகழ்த்தி தமிழ் ஈழ இனம் மிகப் பெரும் காயத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் தந்தை செல்வாவின் நினைவுநாள் மிகவும் உண்மையாக உணரப்படவேண்டிய, நினைவுகூறப்படவேண்டிய நாளாகும். தந்தை செல்வா போன்ற தலைவர்களை புரிந்துகொள்வதன் ஊடாக அவர்களின் குரலுக்கு செவி சாய்ப்பதன் ஊடாக வரலாற்றை வேறுவிதமாக எழுதியிருக்கலாம் என்ற அனுபவத்தை இந்த நாள் உணர்த்துகிறது. தந்தை செல்வாவின் சரித்திரம் அதனை உணர்த்துகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு யுத்தம் முடிந்தபோது தமிழ் ஈழ மக்கள் இனப்பிரச்சனையின் ஆரம்பத்திற்கு வந்திருப்பதைப்போலிருந்தது. இலங்கையின் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டதன் பின்னர் தந்தை செல்வா ஒப்பந்தங்களின் நியாங்களை ஏற்றுக்கொள்வதைப்போல் ஒரு காலம் தென்படுகிறது. இப்போதும் வரலாற்றை நியாயமாக அணுகும் சூழல் நிலவுகிறது. தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியதில் இருக்கும் நியாயத்தை ஏற்பதாக சொல்லும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் நியாயமாக கோரும் தீர்வை, அவர்களின் உரிமையை முன்வைப்பதுதான் உண்மையும் நீதியுமான அணுகுமுறையாகும்.

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமை ஒன்றை வழங்கவேண்டும் என்பதும் அவர்களின் தாயகத்தில் ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளுவதை தவிர்ப்பதும் அவர்களை இன அழிப்பு செய்வதை நிறுத்துவதும் எத்தகைய நெருக்கடிகளைக் கடந்தும் பல்வெறு வடிவங்களில் தொடரும் போராட்டங்களின் ஊடாக வலியுறுத்தப்படும். தமிழ் மக்களை எத்தகைய தீர்வை எதிர்பார்க்கிறார்கள் என்றும் அவர்களின் அபிலாசை என்ன என்றும் வடகிழக்கில் ஈழத் தமிழ் மக்கள் பகிரங்கமாக கூறுவதுடன் வடக்கு மாகாண சபை போன்ற ஈழத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சபைகளும் எடுத்துரைத்துள்ளன.

தந்தை செல்வாவின் இடையறாத போராட்டங்களும் அவரது மரணத்தின் பின்னரான நான்கு தசாப்த போராட்டமும் அதற்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளின் செயல்களும் தமிழ் மக்களுக்கு மிகவும் உறுதியான நிலையான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகின்றது. இதுபோன்ற மிதவாதக் காலம் ஒன்றில் உரிய வகையில் இனப்பிரச்சினையை தீர்க்காதவிடத்து எத்தகை விளைவுகள் எதிர்காலத்தில் உருவாகும் என்பதற்கும் இக் காலகட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்க மறுப்பவர்கள் மீண்டும் அந்த வரலாற்றை வாழச் சபிக்கப்படுவார்கள் என்று சொல்வார்கள். இலங்கையில் அண்மைய காலத்தில் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியை சேர்ந்த, உதயகம்பன்பில, விமல்வீரவன்ச, அரச தரப்பில் இருக்கும் சிலர் ஏனைய பேரினவாதக் கட்சிகள் தமிழர்களின் விடயத்தில் மிகவும் கடும் இனவாதப்போக்கை வெளிப்படுத்துகின்றனர். சிங்கள, கொழும்பு ஊடகங்கள் அவர்களின் பேரினவாதக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமும் கொடுக்கின்றன. ஜனநாயகத்தின் பெயரில் இதனை எல்லாம் செய்தால் வரலாற்றை மீண்டும் வாழ சபிக்கப்பட நேரிடும் என்பதையும் இந்த நாள் உணர்த்துகிறது.

சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் சிறுதுரும்பையும் எதிர்பார்கள். அவர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் மிகவும் பெரும்பான்மையாக இருப்பார்கள். அவர்கள்  தமிழீழத்தை அல்ல, பஞ்சாயத்து சபையை ஏற்படுத்தினாலும் அதனையும் எதிர்ப்பார்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என்பதும் அவர்களை ஒடுக்கி அழிக்க வேண்டும் என்பதுமே அவர்களின் நோக்கம். அத்தகையவர்களின் விருப்பங்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் இடமளித்து ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் பேரினவாதிகளின் தரப்பாக மாற்றக்கூடாது என்பதையும் தந்தை செல்வாவின் சரித்திரம் உணர்த்துகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More