இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், முகப்புத்தகம் ருவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தடையானது ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த ஆணை வரும் வரை தொடருமென காஷ்மீர் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகளால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகவும் மாணவர்களும் கலவரங்களில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளதனாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக ஊடகங்களில் போலியான பதிவுகள் மூலம் குற்றவாளிகள் இளைஞர்களை தூண்டக்கூடும் என்பதனால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாவும் இது ஒரு தற்காலிக தடைதான் எனவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.