முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவைக் கொண்டு தொழிற்சங்கங்களை அடக்க முடியாது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் காமினி லொக்குகே சரத் பொன்சேகாவைக் கொண்டு தொழிற்சங்களை அடக்க முடியுமா என அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும் அரசாங்கம் அவ்வாறான ஓர் முயற்சியை மேற்கொண்டால் அதனை எதிர்க்க கூட்டு எதிர்க்கட்சித் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பதவி ஏற்றுக் கொண்ட நாள் முதல் உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் காலி முகத் திடலில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.