கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்குமான உறவை ஆழமான நிலைக்கு கொண்டுசெல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை உயர்மட்டக் குழுவினருக்கும் இந்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருக்கும் இடையில், நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவிருந்தே, எமது இரு நாடுகளுக்கிடையிலும் வரலாற்று, கலாசார, இனத்துவ மற்றும் நாகரிக தொடர்புகள் காணப்படுகின்ற போதிலும், அவை சிதைவடைந்த சந்தர்ப்பங்களும் பல உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் இருப்பினும், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், மேற்படி தொடர்புகள், மிகவும் உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வலய ரீதியிலான பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக, இந்தத் தொடர்புகளை மிகவும் உயர் மட்டத்தில் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.