அரசியல் காரணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை அரசியல் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பிற்காக, 26 விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 187 பேர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவது வழமையானது என குறிப்பிட்டுள்ள அவர் மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கிய 42 காவல்துறை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் விசேட சந்தர்ப்பங்களில் மஹிந்த கோரினால் பாதுகாப்பை அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.