இன்று (05.05.2017 )யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவரின் அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர்களுக்கும், துணைத்தூதுவர் நடராஜனுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பின்போது, ஈ.பி.டி.பி சார்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக ஈ.பி.டி.பி கட்சியின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து நிரந்தரத் தீர்வு நோக்கி முன்னேற்றம் காண்பதே நடைமுறைச் சாத்தியமானது என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தெளிவுபடுத்தியதுடன், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்போ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ தேவையில்லை என்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
வடக்கு மாகாணசபையைப் பொறுப்பேற்றவர்கள் அதை செயற்திறனோடு நிர்வகிக்காததால் வடக்கு மாகாணம் நிர்வாக ரீதியாக முடக்கப்பட்டிருப்பதையும். மாகாணசபை ஊடாக எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் மக்களைச் சென்றடையாமல் இருப்பதையும் ஈ.பி.டி.பியின் நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் இன்னமும் மீள் குடியேறவுள்ள எமது மக்களுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில், இந்திய அரசு இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என ஈ.பி.டி.பி கோரிக்கை விடுத்தது.
மேலும் மாகாணசபை கவனிக்க வேண்டிய உள்ளுராட்சி சபை நிர்வாகச் செயற்பாடுகள் முறையாக செயற்படாததால், மக்கள் எதிர்கொண்டுள்ள சுகாதாரம் மற்றும் சுத்தம் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சமகால அரசியல் சூழல் தொடர்பாகவும், பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு புனரமைப்புச் செய்து தருவதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துணைத்தூதுவர் நடராஜனிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்தியது.
இந்திய துணைத்தூதுவருடனான சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் ஜீவன், மாவட்டத்தின் மேலதிக நிர்வாகச் செயலாளர் றங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர் என ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது