163
நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் கீழ் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தமற்ற சமாதான நிலைமை, முழு நாட்டின் ஐக்கியத்திற்கும் நிரந்தரமான சமாதான நிலைமைக்கும் வழி சமைக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பு இப்போது சந்தேகத்திற்கு உரியதாக மாறியிருக்கின்றது. இது துரதிஸ்டவசமானது. அது மட்டுமல்ல. இந்த நிலைமையானது, இந்த நாட்டின் அரசியல் நிலைமைகள் ஸ்திரமற்ற ஒரு தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளமாகவும் திகழ்கின்றது. அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளும் ஒரு முக்கியமான கால கட்டத்தை அடைந்திருப்பதையும் அடையாளப்படுத்தியிருக்கி;ன்றது. இந்த அரசியல் கால கட்டம் என்பது, தமிழ் மக்களுடைய அரசியலை வலுவானதொரு பாதையில் முன்னோக்கி நகர்த்திச் செல்லப் போகின்றதா அல்லது அதளபாதாளத்தில் வீழ்த்திவிடப் போகின்றதா என்பதை நிர்ணயிக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகவும் உருமாறிக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக இந்த ஆட்சியைப் பதவிக்குக் கொண்டு வருவதற்காக முதலில் திரைமறைவில் நின்று முழு மூச்சுடன் செயற்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலரும் இந்த ஆட்சியின் கீழ் 2016 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு காணப்படும் என்று உறுதியாக நம்பினார். கூட்டமைப்பின் ஏனைய கட்சியைச் சேர்ந்தவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் மக்களையும் நம்பிக்கை வைக்குமாறு அவர் கோரி வந்தார்.
இந்த நாட்டின் இருபெரும் சிங்கள அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதென்பது, இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே கிடைத்தற்கரியதொரு சந்தர்ப்பமாகவும் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டது மிகவும் பொருத்தமானது. இதில் சந்தேகப்படுவதற்கு எதுவுமில்லை. காரணம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஆளும் கட்சியாக அதிகாரத்தில் இருக்கும் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதனை வலுவாக எதிர்த்துச் செயற்பட்டது. அதனால் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சிகள் பயனற்றுப் போயின.
அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்த்து அந்த முயற்சி;யைத் தொடரவிடாமல் தடைபோட்டிருந்தது.
இவ்வாறு இந்த இரண்டு பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் செயற்பட்டு, அரசியல் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை முறியடித்திருந்தன என்பது அரசியல் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் அரசியல் வரலாற்றில் இந்த இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்ததென்பது முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கின்றது. ஒன்றையொன்று எதிர்த்து அரசியல் தீரவு காண்கின்ற நடவடிக்கையைப் பாழ்படுத்திய இந்தக் கட்சிகள் இரண்டும் இணைந்து அதிகாரத்தில் இலு-இருக்கும்போது, அரசியல் தீர்வுக்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சியானது வரலாற்றின் வழக்கத்துக்கு மாறாக பாரிய எதிர்ப்பின்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்படலாம். அதற்கான சரியான சந்தர்ப்பமாக இந்தத் தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் கருதப்பட்டது.
ஆனால் இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் இலவுகாத்த கிளியின் நிலைமைக்குத் தமிழ் மக்களை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றதே என்று கருதத் தக்க வகையில் அமைந்திருக்கின்றன. இந்த அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனே, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்வாங்கக் கூடிய ஆபத்து எற்பட்டிருப்பதாக சட்டிக்காட்டியிருக்கின்றார்.
புதிய அரசியலமைப்பின் தேவை
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் ப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் அந்தப் பேச்சுவார்த்தைகள் பயனற்றவைகளாக முறிந்து போயின. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மாற்ற பேரின சிங்கள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கிழித்தெறியப்பட்டன. அல்லது மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட முடியாத வகையில் கிடப்பில் போடப்பட்டன.
அது மட்டுமல்லாமல், அரசியல் தீரவு என்பது சிறுபான்மை இன மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். அரசியலில் அவர்களுக்கான அசைக்கமுடியாத – கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு இல்லாதொழிக்கப்பட முடியாத வகையிலான அரசியல் உரிமைகளை அளிப்பதாக அமைய வேண்டும். இத்தகைய ஒரு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமானால், இலங்கையின் அரசியலமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் தீர்வு குறித்து சிந்தித்தவர்கள் உறுதியாக நம்பினார்கள்.அரசியல் தீர்வு என்பது அதிகாரப் பரவாலக்கலை – அதிகாரங்களை இறைமையின் அடிப்படையில் பகிந்தளிப்பதாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள்.
இந்த வகையில் எத்தனை பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் எத்தனை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டாலும், அவற்றில் எட்டப்படுகின்ற இணக்கப்பாடுகள், உடன்பாடுகள் என்பன சட்ட ரீதியாக அரசியலமைப்புக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற சிந்தனைத் தெளிவும் ஏற்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியிலேயே, யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இனப்பிரச்சினையை இனிமேலும் இழுத்தடித்துச் செல்ல முடியாது. அதற்கு ஒர் அரசியல் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் என்ற சிந்தனைப் போக்குடைய நிலையில் ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து, அதனை நிலைநிறுத்துவதற்கான தேசிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேசிய அளவிலான தேவை நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மத்தியில் முதலில் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. ஆயினும், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு தனக்கும் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அரசியல் நலன்களுக்காக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தியதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரத்தில் ஜனாதிபதிக்குரிய அதிகார்களைப் பயன்படுத்தி காலம் காலமாகத் தானே ஜனாதிபதியாக – ஒரு சக்கரவர்த்தியைப் போல ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொண்ட அரசியல் காய் நகர்த்தல்களை அவர்கள் (இப்போதைய ஆட்சியாளர்கள்) விரும்பவில்லை.
ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறையில் ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்காக மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
அது மட்டுமல்லாமல், நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறையைப் பயன்படுத்தி அரசியல் களத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றிகொள்ள முடியாதவராகத் திகழ்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும். விகிதாசாரத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் மிகவும் உறுதியாகத் தீர்மானித்தார்கள். நாட்டிற்குப் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதன் ஊடாகவே இதனைச் சாதிக்க முடியும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.
ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் செயற்பட்ட அவர்களுக்குத் துணை புரிந்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கமைய, புதிய அரசியலமப்பில் அரசியல் தீர்வு காண்பதற்கு அவசியமான விடயங்களையும் உள்ளடக்குவதற்கு அவர்கள் இணங்கினார்கள்.
அரசியல் தீர்வு காண்பதற்குரிய அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் பிரதான நோக்கமாகும். ஆனால், அரசியல் தீர்விலும் பார்க்க, நிறைவேற்று அதிகாரத்தையும், விகிதசாரத் தேர்தல் முறையையும் வைத்துக் கொண்டு தமது அரசியல் எதிரிகள் குறிப்பாக மகிந்த ராஜபக்ச அணியினர் நீண்ட காலம் ஆட்சி நடத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது. அத்தகைய வாய்ப்பினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.
மேதினம் ஏற்படுத்தியுள்ள திருப்பம்
இத்தகைய ஒரு நிலைமையில்தான் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் அந்தச் செயற்பாடுகள் வெற்றியளிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினர் உள்ளிட்ட, ஏனைய அரசியல் தரப்பக்களைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினராகிய மகிந்த அணியினர் புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். அரசியலமைப்பில் வேண்டுமானால், திருத்தங்களைக் கொண்டு வரலாம். புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் ஏனைய மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அவரை அரசியல் ரீதியாக முடமாக்குவதற்கு முனையவில்லை.
தேர்தலில் தோல்வியடைந்தாலும்கூட, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். அதற்கான அடித்தள அரசியல் செயற்பாடுகளை அவர் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றார்.
பொதுமக்களைப் பெரிய அளவில் அரசியல் ரீதியாகக் கவர்ந்திழுக்கத் தக்க வகையில் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயர் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை. ஊழல் புரிந்தார்கள் என்று கடந்த ஆட்சியில் அதிகாரம் படைத்திருந்த பலர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்கள் சட்டரீதியாகத் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, முன்னைய அரசாங்கத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகளை இல்லாமல் செய்யத்தக்க வகையிலான நடவடிக்கைகளையோ வேலைத்திட்டங்களையோ புதிய அரசாங்கம் வலுவான முறையில் செயற்படுத்தவுமில்லை.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், அரச பணியாளர்களுக்கான சம்பள உயர்வு போன்ற பொதுமக்களின் பிரச்சினைகளுக்கும் அரசாங்கத்தினால் தீர்வு காண முடியவில்லை. அல்லது இந்தப் பிரச்சினைகளில் முன்னைய அரசாங்கத்தின் போது இருந்த நிலைமைகளில் பெரிய மாற்றத்தையும் காட்ட முடியவில்லை. மொத்தத்தில் புதிய அரசாங்கம் சிங்கள மக்களுக்குக் கூட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. அதேநேரம், சிங்கள மக்களைக் கவரத்தக்க வகையில் அரசியல், பொருளாதாரம், சமூகம் என்பவற்றில் புதிய நிலைமைகளை உருவாக்கவும் இந்த ஆட்சியாளர்களினால் முடியாமல் போயிருக்கின்றது.
மாறாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளதன் மூலம்ட தமிழ் மக்களுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கிவிடப் போகின்றாரக்ள் என்ற மகிந்த ரரிஜபக்ச அணியினருடைய அரசியல் பிரசாரங்கள் வலுப்பெற்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் மே தினத்தன்று காலிமுகத்திடலில் நாட்டு மக்களை கடல் அலையாகத் திரட்டிக் காட்டுகின்றேன் என சவால்விட்டு அதற்கேற்ற வகையில் மேதினத்தன்று மகிந்த ராஜபக்ச மக்கள் கூட்டத்தைப் பிரமாண்டமான முறையில் அணிதிரட்டியிருந்தார்.
அவருடைய மேதினக் கூட்டத்தில் அணி திரண்டிருந்த அனைவருமே அவருக்கு ஆதரவானவர்கள். இந்த ஆதரவாளர்களே மகிந்த ராஜபக்சவின் வாக்கு வங்கியின் சொந்தக்காரர்கள் என்று அனுமானிக்க முடியாது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார் கள். ஆனாலும், மேதினத்தன்று மக்கள் மத்தியில் தனக்கு உள்ள செல்வாக்கைக் காட்டும் வகையில் மக்கள் கூட்டத்தை அணி திரட்டியிருப்பது, அரசாங்கத் தரப்பினரை, அரசியல் ரீதியாகச் சற்று கவலையடையச் செய்திருக்கின்றது.
புதிய அரசியலமைப்பானது நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஆகவே அதற்கு ஆதரவளிக்க முடியாது என மகிந்த ராஜபக்ச அந்தக் கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்தும் அரசாங்கத்தைச் சிந்திக்கச் செய்திருக்கின்றது.
மகிந்த ராஜபக்சவின் இந்த நிலைப்பாடு காரணமாக, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் பின்வாங்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது என சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மகிந்த ராஜபக்சவின் அரசியல் எழுச்சியானது, நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் இருப்பை கேள்விக்கு உள்ளாக்க வல்லது. மக்களின் ஆதரவைப் பெற்ற அவர் எழுச்சியுற்றால், தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு வரநேரிடும். அத்தகைய ஒரு நிலைமைக்கு உள்ளாக்கத்தக்கச் செயற்பாடுகளைச் செய்வதற்கு நிச்சயம் அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிக்காது.
மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்பையும் மீறி, புதிய அரசியலமைப்பை உருவாக்கினால், அதனையே அரசியல் முதலீடாகக் கொண்டு மகிந்த ராஜபக்ச அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்து ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற அரசியல் அச்சமே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் அடிப்படையிலேயே சம்பந்தனின் கருத்தும் வெளிவந்திருக்கின்றது.
திருப்பு முனை நிலைமை
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வு காணப்படும் என்ற கூட்டமைப்பு தலைமையின் நிலைப்பாடு தளர்வடையும் நிலையிலேயே இப்போதைய அரசியல் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு காணும் விடயத்தை விட்டு, ஏனைய நிலைமைகளை நோக்கினாலும்கூட, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று காலம் காலமாகத் தமிழ்தர்பபினர் குரல் கொடுத்து வந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தக் கோரிக்கை வேகத்துடன் பலராலும் முன்னெடுக்கப்பட்டது. ஐநா மனித உரிமைப் பேரவை மட்டுமல்லாமல், பல்வேறு மனிர உரிமை அமைப்புக்களும் சர்வதேச நாடுகளும்கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதற்காகக் குரல் கொடுத்திருந்தது. மக்களை அணி திரட்டி வீதிகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியிருந்தது.
ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த வருடம் முன்மொழியப்பட்ட இந்தச்சட்டத்திற்கு இப்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிக்கின்றது. இந்தச் சட்டம் முன்னர் இருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்திலும் பார்க்க பல விடயங்களில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கத்தக்கவை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய சட்டமானது, நிறைவேற்று அதிகாரத்தை விரிவாக்க வல்லது, பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிக்கத்தக்கது. நாட்டின் பன்மைத்துவத்தைத் திணறச் செய்ய வல்லது. சித்திரவதை மற்றும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான ஓட்டைகளைக் கொண்டுள்ளது. மொத்தத்தில் மன்களுடைய பல உரிமைகளைப் பாதிக்கத்தக்க வகையிலேயே இந்தப் புதிய பயங்கரவாதச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் முக்கியமான சில திருத்தங்களைச் செய்யுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்த போதிலும், அவற்றில் ஒன்றைத் தவிர ஏனைய மூன்று விடயங்களையும் அரசு தூக்கி எறிந்துவிட்டு, இந்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது குறித்து கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.
அரசுக்கு ஆதரவளித்த தமி;ழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை இந்தச் சட்டம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் தூக்கி எறிந்திருப்பதானது, அரசு கூட்டமைப்பைப் பொருட்படுத்தாத வகையில் தனது விருப்பப்படி நடப்பதையே காட்டுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் என்று பலதரப்பட்ட பிரச்சினைகளிலும் அரசாங்கம் கூட்டமைப்பைத் தூக்கி எறிந்த நிலையிலேயே நடந்து கொண்டிருக்கின்றது.
இதனால் மக்கள் கூட்டமைப்பின் தலைமையின் செயற்பாடுகள் குறித்து சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், தாங்களே வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி கூட்டமைப்பின் வழிநடத்தலுக்குப் பதிலாகப் புதிய அரசியல் வழிநடத்தல் குறித்த சிந்தனையும் தமிழர் தரப்பில் எழுந்துள்ளது.
இத்தகைய பின்னணியில்தான் தமிழ் அரசியல் என்பது மிகவும் சிக்கலான ஒரு கட்டத்தில் இப்போது வந்து நிற்கின்றது. அவ்வாறு வந்து நிற்பது மட்டுமல்லாமல் ஒரு புதிய திருப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. அந்தத் திருப்பம் என்ன அதனை ஏற்படுத்தப் போவது யார் என்பது உடனடியாகப் பதில் கிடைக்காத பெறுமதி மிக்க கேள்வியாக அமைந்திரு;ககின்றது.
Spread the love