கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சொர்க்கமே என்றாலும் எங்களது சொந்த ஊரை போல வராது வளமாகவும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என கண்ணீருடன் இரணைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மே முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சொந்த ஊருக்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கிறது. ஊருக்கு போகாமல் தங்களின் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மக்கள் உறுதியாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இரணைத்தீவில் வாழ்ந்த போது வசதியான வாழ்க்கையை வாழ்ந்தோம், பல தொழில்கள் இருந்தன. நாங்கள் கஸ்ரப்படவில்லை வைத்தியசாலைக்கு சென்றது கிடையாது. ஒன்றாக ஒற்றுமையாக கூடி வாழ்ந்த ஊர் எங்களது தென்னைகள் வளர்ந்து காய்க்கின்றன. கடற்படையினர் எங்களது தேங்காய்களை எங்களிடமே கொண்டு வந்து விற்கின்றனர். எங்களது காணிகளில் குடியிருந்துகொண்டு எங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறுகின்றனர். இது மிகவும் வேதனையாக உள்ளது எனத்தெரிவித்தனர்
இன்று ஞாயிற்றுக்கிழமை ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா, மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு. கவனயீர்ப்பில் ஈடுப்படும் மக்களுக்கு தங்களின் ஆதரவையும் தெரிவித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.