206
இன்றைக்கு உலக அன்னையர் தினம். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது இலங்கை. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்வது மிக இலகுவானது. கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். அன்னையர்தி னமான, இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர்.
ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்சியை தனக்குள் உருவாக்கியிருப்பவர். ஏன் அழ வேண்டும்? என்பதுதான் அவரது கேள்வி. இலங்கை அரசு உத்தரவாதமளித்து இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை திருப்பித் தரவேண்டியது அரசின் கடமை.எனவே இலங்கை அரசு எனது பிள்ளையை திருப்பித் தரவேண்டும் என்கிறார் செல்லம்மா.
காணாமல் போன பிள்ளை என்று அடையாளப்படுத்த விரும்பாத செல்லம்மா எனது பிள்ளையை காணாமல் போன பிள்ளை என்று இலங்கை அரசு சொல்ல முடியாது என்கிறார். கையளிக்கப்பட்ட பிள்ளை காணாமல் போவது எப்படி என்று அவர் கேட்கும் கேள்விக்கு இலங்கை அரசு பதில் அளிக்கவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் வீடுகளில் அந்தப் பிள்ளைகள் குறித்து அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். எந்தக் கணத்திலும் அவர்கள் நினைவுதான். எந்தக் கணத்திலும் அவர்கள் வருகிறார்களா? என்ற எதிர்பார்ப்புத்தான் எஞ்சியிருக்கும்.
போரின் இறுதியில் சரணடையப் போவதாக சொல்லி தனது உடைகளை தாயாரிடம் கையளித்துவிட்டுச் சென்றான் கோபிநாத். எனது பிள்ளை எங்கு சென்றான்? எப்போது வருவான் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டே வாழ்கிறார் அவனது தாயார் வாசுகி. படலை திறக்கும் சத்தம் கேட்கும்போதெல்லாம் என் பிள்ளை வருகிறார் என்றே என் மனம் நினைக்கும் என்று சொல்கிறார் வாசுகி. நாளும் பொழுதும் கண்ணீரோடு காலத்தை கழிக்கும் இந்த தாயின் கண்ணீருக்கு யார் பொறுப்பு?
இலங்கையின் புதிய அரசும் தமிழ் ஈழ அன்னையர்களின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லையே? அகாலத்தில் பறிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகள் குறித்து இந்த அரசு என்ன சொல்லப் போகிறது? இந்த விடயத்தில் ஏன் புதிய அரசும் மௌனம் சாதிக்கிறது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சேர்ந்த ஜெயகலா கைது செய்யப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட தன் பிள்ளையின் புகைப்படத்தை ஏந்தியபடி கண்ணீர் சிந்துகிறார். கைது செய்யப்பட்ட மகன் பூசா சிறைச்சாலையில் உயிருடன் இருக்கும் புகைப்படத்தை சாட்சியமாக்கி இந்த தாய் போராடுகிறாள்…
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த தனது பிள்ளை எங்கே? என்று கேள்வி எழுப்பும் இந்த அன்னைக்கு இலங்கை அரசு பதில் அளிக்க வேண்டும். இப்படி எத்தனை பிள்ளைகளுக்காக எத்தனை அன்னையர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்? இந்த நாள் அன்னையர்களின் கண்ணீரை துடைக்கும் செயலை தொடங்குவதுதான் அன்னையர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதை. ஆட்சியாளர்களும் தலைவர்களும் இதற்கான மெய்யான நடவடிக்கைகளைத் தொடங்குவார்களா?
இன்று வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்தியபடி தெருவில் இருந்து அறுபது எழுபது நாட்களாக அன்னையர்கள் போராடுகின்றனர். இவர்களை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை. மனித உரிமை அமைப்புக்களும் இதற்கு ஆதரவாகவோ, அன்னையர்களின் கண்ணீரை துடைக்கும் விதமாகவே குரல் கொடுக்கவில்லை என்பதும் கவலைக்குரியது.
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டின் அடையாளம் என்பது என்ன? மனித உரிமையற்ற, குற்றங்கள் நிறைந்த, நீதியற்ற, அநீதிகள் நிறைந்த ஒரு நாட்டில்தான் அன்னையர்கள் கண்ணீர் சிந்துவார். படுகொலை செய்யப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட ஒரு இனத்தின் அன்னையர்கள் கண்ணீர் சதாரணமானதல்ல. வலியது அக் கண்ணீர். ஈழ அன்னையர் கண்ணீர் சிந்துவதன் ஊடாக சொல்லப்படும் செய்தியை இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.
Spread the love