கழிவு முகாமைத்துவத்திற்கான எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட வேண்டிய விசாரணை அறிக்கையை துரிதமாக வழங்குமாறு கூறிய ஜனாதிபதி பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பொலித்தீன் வகைகளை தடை செய்தல் தொடர்பான புதிய அமைச்சரவை விஞ்ஞாபனத்தை தயாரிக்குமாறும் உரிய துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.
கழிவு முகாமைத்துவத்தில் உள்ளுராட்சி நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சகல உள்ளுராட்சி ஆணையாளர்களும் ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒவ்வொரு மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த உள்ளுராட்சி ஆணையாளர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை வகுப்பதற்குரிய ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சுக்களுக்கும், உள்ளுராட்சி நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.