நாடுகளிடையே ஏற்பட்ட பிரிவினையால் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதாகவும் இதனைத் தவிர்க்க உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் 72-வது ஆண்டு வெற்றி தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் விளாடிமிர் புதின் மேற்படி தெரிவித்துள்ளார்.
உலகின் தலையெழுத்தை நாங்கள்தான் தீர்மானிப்போம் என ஜெர்மனியின் நாஜிக்கள் நினைத்ததால் இரண்டாம் உலகப்போர் வெடித்தெனவும் அப்போது பல்வேறு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரிவினையும் உலகப் போருக்கு வித்திட்டுத எனவும் சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்தில் இதுபோன்ற போர்களைத் தவிர்க்க உலக
நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்றே ரஷ்யா விரும்புகிறது எனவும் எனினும் ரஷ்யாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டால் அதை ராணுவ ரீதியில் எதிர்கொள்வோம் எனவும் புதின் தெரிவித்தார்.