இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான
நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பு
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை செல்லும் இந்திய பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் மாலை 3 மணிக்கு கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.