இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்தியா எப்பொழுதும் உறுதுணையாக இருக்குமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த பகவானின் போதனைகள் 21ம் நூற்றாண்டிலும் செல்லுபடியாகும் எனத் தெரிவித்த அவர் அதன் பெறுமதியை எதிர்காலத்திலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் கொழும்புக்கும் வாரணாசிக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தமிழ் சகோதரர்கள் பயணிப்பதற்கு இலகுவாக இந்த விமான சேவை அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.