தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ‘தென்னவன்’ வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
மாணவர்களிடையே சுயதொழில் மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை விரிவுபடுத்தும் நோக்கிலும், பல்கலைக்கழகம் நுழைய முடியாத மாணவர்களுக்கு பிற மேற்படிப்புகளுக்கான வழிகாட்டும் நோக்கிலும் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப சுயதொழில் நிறுவனங்கள், மாதர் அமைப்புகள், உயர் கல்வி மையங்கள், வங்கிகள் ஆகியவை 60க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களை அமைத்துள்ளன.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ;ணகுமார், பேராசிரியர் சு.கந்தசாமி, உதவிக் கல்விப் பணிப்பாளர் கு.செல்வன், ஓய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன் ஆகியோரும் தென்மராட்சி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.