சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகிறதா? என்று விழிபிதுங்கச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகியிருக்கின்ற பரீட்சை பெறுபேறுகளையும், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியிருக்கிற விகிதாசார எண்ணிக்கையையும் அளவுகோலாகக் கொண்டு செய்யப்பட்ட கணக்கின்படி, வடக்கு கிழக்கு மகாணங்களின் கல்வித் தரம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. மிகவும் பின் தங்கிய மாகாணங்களாகச் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இது முதல்தடவையல்ல. இரண்டாவது தடவையாக இது நிரூபிக்கப்பட்டு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் கணிசமான அளவிற்குச் செய்திகளாகப் பகிரப்பட்டிருக்கிறது.
இங்குள்ள கல்வித் துறை நோய்வாய்ப் பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை அந்த நோய்க்கான காரணம் என்ன என்பதுவும், எத்தகைய கிருமிகளால் உருவாக்கப்பட்டது அல்லது பரப்பப்பட்டது என்ற முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஊக அடிப்படையிலே அது பற்றிப் பேசப்படுகிறது. பேசு பொருளாக இருக்கின்ற இந்த விடயத்தைத் தீர்க்கவல்ல, ஆரோக்கியமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நோய் என்னவென்று தெரிந்திருந்தும் சிலர் மௌனம் சாதிப்பதாகவே எமக்குத் தோன்றகிறது.
இது பற்றிய தேடலில் கடந்த இரண்டு வாரங்களாக நான் சந்தித்த கல்விசார் ஆளுமைகளாலும், கல்விசார் மக்கள் பிரதிநிதிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களையும், அவர்கள்தம் ஆதங்கங்களையும் கீழ் கண்டவாறு தொகுத்திருக்கிறேன். பிரச்சினையைக் கண்டறிந்து களைவதுதான் எமது நோக்கமேயொழிய இதனூடாக ஒரு அரசியல் செய்வதல்ல. எனவே அவர்களால் சொல்லப் பட்ட வெளிப்படையான கருத்துக்களை இங்கே தொகுத்திருக்கிறேன். அவை பிரச்சினைக்கான திறவுகோல்களேயொழிய தீர்வாக இருக்காது. அத்துடன் எம்முடன் கலந்துரையாடித் தகவல்கள் தந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க , அவர்கள் சார்ந்த எந்த ஒரு விபரத்தையும் இங்கு குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறேன். ஊடக தர்மமும் அதுவே.
சந்திப்பு 1 – பெற்றோர்களே இதன் காரணகர்த்தாக்கள்:
பெறுபேறுகளை பெறாத மாணவர்களின் பெற்றோரைச் சந்திக்கும்போது நாம் அறிந்த விடயம் அவர்கள் தமது பிள்ளையின் கல்வியில் ஈடுபாடு இல்லாதவராக இருக்கின்றனர். அவர்களில் ஒரு பகுதியினருக்குத்தமது பிள்ளைகள் என்னத்தைப் படிக்கிறார்கள் என்று கூடத்தெரிந்திருக்கவி ல்லை. கல்வியறிவுள்ள பெற்றோர்களும் தரம் 5 புலமைப் பரீட்சையே மிகமுக்கியமானது என்ற போக்கில் அதுவரை பாடசாலைக்கு அடிக்கடி வருவதும், ஆசிரியர்களைச் சந்திப்பதுவும் என்று மிகவும் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். அதற்கப்பால் அவர்கள் அதைத் தொடருவது இல்லை. அடுத்ததாகப் போருக்குப்பின்னலான சமூகத்தில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலை மாற்றங்கள். பொழுது போக்குச் சாதானங்களும், அதற்குரிய வழிவகைகளும் –- குறிப்பாகக் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையப் பாவனை –அதிகரித்திருப்பதால் அவர்கள் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகரித்து உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அவரவர் புலம் பெயர் உறவுகளிடமிருந்து பெறப்படும் நிதி உதவிகள். அத்துடன் அவர்கள் இங்கு விருந்தினராக வந்துபோகும்போது விட்டுச் செல்லும் அந்நியப் பழக்க வழக்கங்கள். அடுத்ததாக மாணவர்களைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களுக்கும், களியாட்டங்களுக்கும் , விழாக்களுக்கும் அவர்கள் கொடுக்கின்ற முக்கியத்துவம். அதற்காகப் பெற்றோர்கள் நாட்கணக்கில் மாணவர்களை பாசாலைக்கு அனுப்பாது வீட்டோடு வைத்திருத்தல். இப்படியே ஒரு தொடர்சியற்ற கல்விச் செயற்பாடுகளாலும் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது.
சந்திப்பு 2 – கடமை தவறும் அதிபர்கள்:
பெரும்பாலான அதிபர்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் நேரங்களை தமது அலுவலகப் பணிகளுக்காக எடுத்துக் கொள்ளுகின்றனர். திணைக்களத்தினால் அனுப்பப்படும் படிவங்களையும், கோவைகளை நிரப்பும்பணிகளில் அவர்கள் நேரம் விரயப்பட அனுமதிக்கின்றனர். வகுப்பறைக் கற்பித்தல்நேரங்களைப் பாதிக்கின்ற பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், விழாக்கள் மற்றும் வெளியார் நிகழ்வுகளை நடத்தச் சரியான திட்டமற்றவராகக் காணப்படுகிறார். பாடத் தெரிவுகளுக்குச் சரியான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால்மாணவர்கள்பொருத்தமற்றபாடங்களைத்தெரிவுசெய்து தவறான பெறுபேறுகளைப் பெறுகின்றனர். தகமையற்ற ஆசிரியர்களை கற்பிக்க அனுமதித்து நேரசூசிகையை இடை நிரப்பச் செய்தல் போன்ற பல விடயங்களில் அதிபர்களின் பணித்திறனில் பற்றாக்குறை காணப்படுகிறது.அத்துடன் கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியரே மதிய உணவு வழங்கலையும் கண்காணிப்பது. இதற்கு அவர்களுக்கு மேலதிகச் சம்பளம் வழங்கப்படுகிறது. அப்படியாயின் ஆசிரியரைவிட்டுவிட்டு அந்த இடத்திற்கு ஆசிரியரல்லாத ஒருவரை அதிபர் நியமிக்கலாம். இது பற்றி அவர் அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம். விசேடமாகக் கிராமப்புறப் பாடசாலைகளில் கல்விசாராத விடயங்களில் – வேறு வேலைகளில் – மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சந்திப்பு 3 – கடமைதவறும்ஆசிரியர்கள்:
ஆசிரியர்களைப்பொறுத்தவரை, மாணவர்களைக் கனவு காண அனுமதிப்பதில்லை. அத்துடன் அவர்களுக்குத் தன்நம்பிக்கையும், பொறுப்புணர்வையும் ஏற்ப்படுத்தக் கூடிய எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. கல்வி கற்பதற்கான அழுத்தங்களை அதிகமாக ஏற்ப்படுத்துகின்றனர். நேரங்களுக்குட்பட்டுப் பணிபுரியும் ஒரு அலுவலராகவே அவர்கள் பணியாற்றுகின்றனரேயொழிய மாணவர் கல்வியில் அக்கறையும், கற்பிதலுக்குரிய நுட்பங்களும் அவர்களிடம் இல்லை. இறுதி ஆண்டுகளில் நடைபெற்ற பொதுப் பரீட்சை வினாத்தாள்களையும் , அதற்கான புள்ளியிடும் திட்டங்களையும் கைவசம் வைத்திருப்பதில்லை. சில ஆசிரியர்கள் அவற்றைப் பார்வையிடுவதுமில்லை. அத்துடன் என்ன பகுதியில், எப்படியான வினாக்கள் வரக்கூடும் என்று கண்டறியும் திறமையும் அவர்களிடம் இருப்பதில்லை. பாட நூல்களைவிட வாசிப்புத் துணை நூல்களைப் பயன்படுத்துவது குறைவு. அவற்றை பார்க்குமாறு ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிப்பதுவும் இல்லை. கற்பித்தலுக்கான முன் ஆயத்தங்களுடன் வகுப்புக்குச் செல்லாத ஆசிரியர்கள் பலருண்டு. பெரும்பாலும் தமது சொந்தக் குறிப்பினடிப் படையிலேயே விரிவுரையைப்போன்று பாடங்களை நடத்துகின்றனர். மாணவருடனான உறவுகளைப்பேணவும், கற்கைகளில் ஆர்வத்தையும், விருப்பத்தையும் ஏற்ப்படுத்தவல்ல உளவியல் சார்ந்த செயற்பாடுகளை உள்ளடக்கிய எந்தவிததிட்டங்களும்அவர்களிடம்இல்லை.
முன்னர் இருந்த அதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலை வேலை நேரம் முடிந்து மதிய உணவின் பின்னர் மாலை 6.00 மணிவரை அங்கேயே நின்று மாணவர்களுக்குரிய மேலதிக வகுப்புகளை நடத்துவர். விளையாட்டுப் பயிற்சிகளை நடத்துவர். கலை சம்பந்தமான செயற்பாடுகளைச் செய்வர். மாணவர்களுக்குரிய மேலதிகவளங்களை உருவாக்குவதற்குப் பாட நேரங்களை அவர்கள் எடுப்பதில்லை. அப்போது மாணவவர்களிடம் உயிர் துடிப்பொன்றிருந்தது. பெறுபேறுகளுடன் அவர்கள் சமூகப்பண்பும் அதிகரித்துக் காணப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலான பாடசாலைகள் மாலை 2மணிக்குப் பின்னர் களையிழந்து போயிருப்பதைக் காணலாம்.
சந்திப்பு 4– இணையக் கனவுகளால் சீர் கெடும்மாணவர்கள்:
அவர்களிடம் கல்வியில் அக்கறை இல்லை. அதிக நேரம் பொழுது போக்குச் சாதனங்களுடன் பொழுதைக் கழிக்கின்றனர். இணையம் இவர்களை அதிமேதாவித்தனமுள்ளவர்களாகவும், பிழையாகத் தம்மைப் புரிந்துகொள்பவர்களாகவும் உருவாக்கியிருப்பதால் ,தமக்கென்று கனவுகள் இல்லாத சமூகமாக மாறிப்போயிருக்கின்றனர். அவர்களிடம் தன் நம்பிக்கை இல்லை. ஒரு விடயத்தை முன் நின்று, பொறுப்பேற்று செயற்படுத்தும் முகாமைத்துவப் பண்பற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தகைய பண்பானது இயல்பிலே வருவது மட்டுமல்லாமல் குடும்பச் சூழலும் இதைத் தீர்மானிக்கிறது.பிழை விடுவதைத் தவிர்க்க அவர்கள் செயற்கையாக நடக்க முற்படுகின்றனர். மற்றவர்களின் அழுத்தங்களுக்காகக் கல்வி கற்கின்றனர். கெடுதலான பழக்க வழங்கங்களை இலகுவாக உள்வாங்குகின்றனர். பெரும்பாலானவர்கள் பொது அறிவுப் பற்றாக் குறையுள்ளவராகக் காணப்படுகின்றனர். பரீட்சையின்போது இவர்கள் வினாத்தாள்களிலுள்ள அறிவுறுத்தல்களைச் சரியாக வாசித்துப் புரிந்துகொள்வதில்லை என்பதால் வினாக்களையும் புரிந்கொள்ளுவதில்லை. இதனால் சரியாகப் பதிலளிப்பதுமில்லை. மற்றும் கல்விக்குப் பக்கபலமாக இருக்கக் கூடிய வாசிப்புப் பழக்கங்கள் இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
சந்திப்பு 5 பலமான தனியார் கல்வி நிறுவனங்களால் பலமிழந்துபோகும் பாடசாலைகள்:
மாணவர் கல்வியில் முழு ஆளுமையைச் செலுத்தும் பிரதான காரணியாகக் கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன. பாடசாலையைவிட கல்வி நிறுவனங்களையே மாணவர்களும், பெற்றோர்களும் அதிகமாக நம்புகின்றனர். அதனால் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர் கல்வித் தரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது. அத்துடன் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் நகரங்களையும், முதல் தரப் பாடசாலைகைளையும் அண்மித்திருப்பதனால் பிற இடங்களிலுள்ள மாணவர்களுக்குஅத்தகையவாய்ப்பு இல்லாது போகின்றது. அத்தகைய கல்வி நிறுவனங்களிலும் ஒரு வகுப்பில் ஒரே நேரத்தில் பல நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்து கற்பதாக நடவடிக்கைகள் இருக்கின்றன. வழமையாகப் பாடசாலைகளில் ஒரு வகுப்பில் கூடிய தொகையாக நாற்பது மாணவர்களே அனுமதிக்கப்படுவர். அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் பலரும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கச் செல்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. சில பாடசாலை ஆசிரியர்கள் தமது மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வருமாறு ஊக்குவிக்கின்றனர். இதனால், அவர்கள் பாடசாலையில் எடுக்கும் ஊக்கம் குறைவாக இருக்கிறது. பாடசாலையின்முக்கியத்துவம்குறைவதோடு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களைச் சோர்வடையச் செய்கிறது. சமூக நலன் சாராது, முழுக்க முழுக்க வணிக நோக்கங்களையே கொண்டு செயற்படுகின்ற இத்தகைய கல்வி நிறுவனங்களை உடனடியாக இல்லாவிட்டாலும் படிப்படியாகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரக் கூடிய சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
சந்திப்பு 7 – போர் ஒரு சாக்காகச் சொல்லப்படுகிறது:
போர்பற்றியும் ,அது விதைத்துவிட்டுச் சென்றிருக்கின்ற வேதனைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறோம். உண்மைதான். அது ஏற்படுத்தியிருக்கின்ற உளத்தாக்கங்கள் மற்றும் பௌதீகத் தாக்கங்கள் எண்ணிலடங்காதவை. இருப்பினும் அதையே வாழ் நாள் முழுக்கச் சொல்லிக் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பது பொருத்தமற்றது. நாம் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தோன்றியிருக்கின்ற பிரச்சினை என்ன என்பதை அறிந்து தீர்வுதான் காணவேண்டும். அதற்குத் தீர்வைத்தரவல்ல ஆளுமைகள்எம்மத்தியில் பற்றாக் குறையாக இருக்கும் பட்சத்தில் கல்வித் திணைக்களத்துடன் பேசவேண்டும். ஒரு பொது வெளியிலும் இதனை உரையாடலாம்.
சந்திப்பு 8 கல்வியின் எல்லா மட்டங்களிலும் அரசியல்:
கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. பாடசாலைகள், கல்விக் கூடங்கள், கல்வித் திணைக்களங்கள், அதிகாரிகள் என்று எல்லோரும் சேர்ந்து சத்தியப்பிரமாணமொன்றைஎடுத்தாக வேண்டும்.“இனிமேல் அரசியல் தொடர்புகளையோ! அல்லது அரசியல்வாதிகளையோ !எமது கல்வி நடவடிக்கைக்குள்படுத்தக் கூடாது. அவர்களும் எம்மை நோக்கி வரக் கூடாது. நாங்களும் அவர்களை நோக்கிச் செல்லமாட்டோம்.”இவ்வாறு திடசங்கற்பம் எடுக்கப்படும் போது பகுதிப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாகவே எண்ணலாம். ஏனெனில் கல்வித்துறை சார்ந்த அதிபர் , ஆசிரியர், ஊழியர் மற்றும் அதிகாரிகள் என்று அவர்கள் நியமனங்களிலும், இடமாற்றங்களிலும் மற்றும் அவர்கள் தொடர்பான விடயங்கள் எல்லாவற்றிலும் அரசியல்வாதி அல்லது அரசியல் பின்னணி சார்ந்த அதிகாரிகளின் தலையீடு இருக்கின்றது. தேவையற்ற இடமாற்றங்களுக்கும் இதுவே பின்னணியாகவும் இருக்கிறது. சில நேரங்களில் மாணவர்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாகவும் இத்தகைய அரசியல் பழிவாங்கல்கள் நடைபெறுகின்றன. இதனால் பாடசாலையும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
சந்திப்பு 9 யுத்த காலத்தில் ஒழுக்கம் இருந்தது.
யுத்தகாலத்தில் மாணவர்கள் ஒரு நெருக்கடிக்குள் இருந்தனர். கல்வியைத் தவிர வேறு பொழுது போக்கற்றவர்களாக இருந்தனர். அதனால் தமது கல்வியில் அதிக கவனம் செலுத்தினார்கள்.யுத்தம் எப்போது முடிந்ததோ அப்போது அவர்கள் ஒரு சுதந்திரமான சூழ்நிலைக்குள் வந்துவிட்டார்கள். ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள் கட்டுப்பாடற்றதொரு வேறு விதமான வாழ்வியலுக்குள் வந்தவுடன் அவர்களில் ஒரு பாய்ச்சல் நிலையே தென்பட்டது. தான்தோன்றித் தனமாக நடக்கத்தொடங்கிவிட்டனர். எம்மிடமிருந்த கலாசார பண்பாடுகள் தகர்த்தெறியப்பட்டுவிட்டன. ஒழுக்கம் குறைந்ததனால் தரமும் குறைந்துவிட்டது.
சந்திப்பு 10அதிகாரிகளும், திணைக்களங்களும் சமூகச் சிந்தனையற்றுக் காரியமாற்றுவது:-
அடிக்கடி நடைபெறும் அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் இடமாற்றங்கள்பாடசாலையைப் பாதிக்கிறது. அதனால் மாணவர்கள் கல்வி ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. பாடவிதானத்திலுள்ளபடி பாடசாலையில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கும், பரிசளிப்பு விழாக்களுக்கும் செலவிடும் நாட்கள் அதிகமாகக் காணப்படுகிறது. அவை கல்விச் செயற்பாடுகளற்ற நாட்களாகவே கணிக்கப்படுகிறது. பாடத்திட்டங்கள் மாறும்போது அதுபற்றி ஆசிரியர்களுக்கு முறையாகப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. பாடசாலைத் தவணைப் பரீட்சைகளில் கொடுக்கப்படும் வினாத்தாள்களுக்கும், வலயங்களில் கொடுக்கப்படும் வினாத்தாள்களுக்கும், பரிட்சைத் திணைக்கள வினாத்தாள்களுக்கும் இடையே ஒருங்கிசைவென்பது கிடையாது. இதனால் மாணவர்கள் பரீட்சைகளில் கொடுக்கப்படும் வினாத்தாள்களுக்குச் சரியாக விடை எழுத முடிவதில்லை. அத்துடன் தொகுதிப்பாடம் தொடர்பாகப் பாடத்தெரிவு பற்றிய விளக்கம் தரம் 9இல் கொடுக்கப்படல் வேண்டும். அது நடைபெறுவதில்லை. இதனால் O/L பெறுபேறுகள் பின்னடைவைக் காட்டுகின்றன.
மற்றும் மொழியும், வரலாறும் முக்கிய பாடங்களாக இருக்கின்றன. பரீட்சைகளில் மொழி சார்ந்த வினாத்தாள்கள் மிகவும் தரம் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. வரலாற்றில் தமிழர்கள் அல்லாதோரின் விடயங்களே அதிகம் உள்ளடக்கப்பட்டுள்ளது. வலிந்து ஊட்டப்படுகின்ற விடயங்கள் மாணவர்களைச் சென்றடைவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த இரண்டு பாடங்களில் அதிக புள்ளியைப் பெறாதவர்களால் சித்தி வீதம் குறைந்து காணப்படுகிறது. இவற்றில் சித்தியடையாதவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்ற முடிவும் எட்டப்படுகிறது. அடுத்ததாக சமய பாடத்தில் பரீட்சை வினாத்தாள்களில் உள்ள வினாக்கள் மாணவர்களின் தரத்திற்கேற்றவாறு அல்லாது தரமுயர்ந்தவையாகக் காணப்படுவதால் அவர்கள் அப்பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
சந்திப்பு 11 மத்திய மற்றும் மாகாணங்களுக்கிடையே அதிகாரம் பங்கிடப்பட்டுள்ளது.
வட மாகாண சபை தோன்ற முன்னர் ஆளுநர் முழு அதிகாரம் கொண்டவராகக் காணப்பட்டார். அவர் சுயமாக முடிவு எடுத்து விடயங்களை நடைமுறைப்படுத்தினார். அவர் எடுக்கின்ற ஒவ்வொன்றும் அரசாங்கத்தின் முடிவாகவும் இருந்தது. அவரது நடவடிக்கைகளில் பிற அரசியல்வாதிகளின் தலையீடோ அல்லது ஆசிரிய சங்கங்களின் எதிர்ப்போ இல்லாதிருந்தது. அரசியல் வாதிகளும் தங்களது தேவைகளை வேண்டுகோளாகவும், கருத்துக்களாகவும் அவரிடம் வைத்தார்களேயொழிய அழுத்தம் கொடுப்பவர்களாக இருக்கவில்லை. நல்லதோ, கெட்டதோ அவர் முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது அப்படியல்ல. மத்திய கல்வித் துறையின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு அதிகளவில் காணப்படுகிறது. மாகாண மற்றும் மத்தியின் செயற்பாடுகளுக்கு எதிராகச் சங்கநடவடிக்கைகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன. மத்தியிலிருந்து எடுக்கப்படும் முடிவுகள் சில மகாணத்தைத் திருப்பதிப்படுத்துவதாக இல்லை. மாகாணத்தின் முடிவுகள் சிலவற்றை மத்தியிலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளுவதாகவும் இல்லை. இப்படியே அதிகாரமும், நடைமுறைப்படுத்துகின்ற போக்கும் இரண்டு பட்டுக் கிடப்பதால் மாணவர் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரோக்கியமாக இல்லை.
எனவே கல்வித் தரம் குன்றியதற்கான காரணம் என எமது கருத்து :
தரம் குன்றிக் காணப்படுவதற்கு வட மாகாணக் கல்வித்துறை சார்ந்த அனைவரும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கின்றனர்.கல்விஎன்பதுஒருதுறை. அதற்கென ஒருநிர்வாகக்கட்டமைப்பொன்றிருக்கிறது. தேசியரீதியான கல்வித்திட்டமொன்றிருக்கிறது. மாகாணத்துக்கான கல்வித்திட்டமொன்று முண்டு. அவற்றை செயற்படுத்தவும், நடைமுறைப்படுத்தவுமென்று அதிகாரிகள்இ ருக்கிறார்கள். எங்குபலமுண்டு. எங்கு பலவீனமுண்டு என்று அவர்களே வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிய வேண்டியவர்கள். அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவர்கள். “தரம் குறைந்ததற்கான காரணத்தை கண்டறியவும், அதுபற்றியதொரு ஆய்வினை மேற்கொள்ளவும் எமக்கு அதிகாரம் தரப்படவில்லை அல்லது மத்திய மற்றும் மாகாண அரசிடமிருந்து அனுமதிஇல்லை” என்று அவர்கள் சொல்வார்களேயானால் அவர்கள் சமூகப்பொறுப்பற்றவர்கள்என்று வெளிப்படையாகச் சொல்லலாம். கல்வித்துறை சார்ந்த அனைவரும் தம்மைப் பற்றி மட்டும் சிந்திக்காது சமூக மேம்பாட்டையும் சேர்த்துச் சிந்தித்துச் சமூகப்பொறுப்புள்ளவர்களாகச் செயற்படுவோமானால் “வட மாகாணக் கல்வியில் தரம் குறைந்து காணப்படுவது” என்பது ஒரு பிரச்சினையே அல்ல.