வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியொரு நினைவு கூரலுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. திருச்சபை வட்டாரங்களிலும் அப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜனநாயகப் போராளிகள் அமைப்பும் தனியாக ஒர் ஏற்பாட்டைச் செய்கிறது.
தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சியல்லாத ஒரு பொதுமக்கள் அமைப்பு நினைவு கூரலைப் பொறுப்பேற்றால் மேற்கண்டவாறு மூன்றுக்கு மேற்பட்ட தனித்தனியான நினைவு கூரல்கள் இடம்பெறுவதைத் தவிர்க்கலாம் என்று அரசியற் செயற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். இது தொடர்பில் பேரவையோடும் உரையாடப்பட்டுள்ளது. மாகாணசபை அதைப் பொறுப்பேற்க முன்பென்றால் அது பற்றி யோசித்திருக்கலாம். ஆனால் மாகாணசபை தான் நடத்தப்போவதாக அறிவித்த பின் பேரவை அதில் தலையிடுவது சரியல்ல என்று அபிப்பிராயம் கூறப்பட்டுள்ளது. வடமாகாண சபைக்குள்ளும் எல்லா உறுப்பினர்களும் இதில் சம்பந்தப்படுவதாக தெரியவில்லை. மிகச் சிலரே இது தொடர்பில் ஈடுபாட்டோடு காணப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பாக முதலமைச்சரோடு ஒரு சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. ஒரு மாகாண சபை உறுப்பினரும், ஒரு முன்னாள் பிரதேச சபை உப தவிசாளரும், மட்டும் அதில் பங்குபற்றியிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் அமைந்திருப்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் என்பதனால் அப்பகுதிக்குரிய அரசியல்வாதிகளே மே 18ஐ நினைவு கூருவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதல்ல. முள்ளிவாய்க்கால் எனப்படுவது ஈழத்தமிழர்களின் நவீன வரலாற்றைப் பொறுத்தவரை ஒரு இடப்பெயர் மட்டுமல்ல. ஒரு புவியியல் பதம் மட்டுமல்ல. அது ஒரு அரசியல் பதம். எனவே ஈழத்தமிழர்களின் அரசியலை முன்னெடுக்கும் எல்லாருக்கும் அதில் உரிமை உண்டு. அதை ஒரு மாவட்த்திற்குரியதாக குறுக்கக் கூடாது.
இப்போதுள்ள நிலவரங்களின்படி இம்முறையும் நினைவு கூரல் ஒரு குடையின் கீழ் நிகழப்போவதில்லை என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு கிறிஸ்தவ நிறுவனங்கள் அதை ஒரு பொதுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் வடமாகாணசபை தலையிட்ட பின் அவர்கள் தங்களுடைய நிகழ்வை தனியாக வைத்துக் கொண்டார்கள். நினைவு கூர்தலுக்கான முதலாவது பொதுச் சிற்பத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். அந்த சிற்பம் ஒரு சிங்களப் பெண் சிற்பியால் உருவாக்கப்பட்டது.
இம்முறை கொல்லப்பட்டவர்களின் பெயர்களை கற்களில் பொறித்து ஒரு நினைவு கூர்தலை மதகுருமார் ஒழுங்கு செய்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட சிலரை சில தினங்களுக்கு முன் அரச புலனாய்வுத்துறையினர் விசாரித்திருக்கிறார்கள். நிலைமாறு கால நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் நினைவுச் சின்னங்களை நிறுவுவதற்கும், நினைவு கூர்வதற்கும், ஞாபகங்களைப் பேணுவதற்கும் உரித்துடையவர்கள் என்று கூறப்படுகின்றது. நிலைமாறுகால நீதியின் நான்கு பெரும் பிரிவுகளில் ஒன்றாகிய இழப்பீட்டு நீதிக்குள் இது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் நினைவு கூரலை ஒழுங்கமைக்க முற்பட்ட மேற்படி சிவில் சமூக செயற்பாட்டாளர்களை புலனாய்வுத் துறையினர் விசாரித்திருக்கி;றார்கள்.
கடந்த 9ம் திகதி வடமாகாண சபையின் அமர்வு முடிந்தபின் நினைவு கூர்தலைப்பற்றிக் கூடிக் கதைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அன்று வேலையற்ற பட்டதாரிகள் மாகாண சபைக் கதவுகளை மூடி ஆர்ப்பாட்டம் செய்த காரணத்தால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. கடந்த ஆண்டு மாகாணசபையானது நினைவுச் சின்னம் ஒன்றை அமைப்பதற்கென்று ஒரு நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவே நினைவு கூரலுக்கான ஏற்பாட்டுக் குழுவாகவும் செயற்பட்டு வருகிறது. சுமார் ஐந்து ஏக்கர் காணி இதற்கென்று பெறப்படும் என்றும் அதில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாண்டு நினைவு கூரலை எப்படி ஒரு பொதுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் இது வரையிலும் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.இது தொடர்பில் முதலமைச்சர் மக்களையும் கட்சிகளையும் ஒன்றிணைந்து நினைவு கூரவருமாறு முன்கூட்டியே பகிரங்கமாக அறிவிப்பது நல்லது என்று நம்பப்படுகிறது. அவ்வாறு செய்யுமாறு அவரைக் கேட்கப் போவதாகவும் ஒரு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
நினைவு கூரலை ஒரு பொதுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது என்றால் அதற்கொரு அரசியல் தரிசனம் வேண்டும். அவ்வாறான தரிசனம் இருந்தால் தான் அதை ஒரு மக்கள் மைய நிகழ்வாக சிந்தித்து திட்டமிடலாம். கடந்த ஆண்டு அவ்வாறான தரிசனங்களற்ற ஒரு வெற்றிடத்தில் நினைவு கூரல்ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படவில்லை. மாகாணசபையின் நிகழ்வு அரசியல்வாதிகளின் உரைகளால் நிரப்பப்பட்டது. இம்முறை விக்கினேஸ்வரன் மட்டுமே பேசுவார் என்று கூறப்படுகிறது. அரசியல்வாதிகளின் உரைகளை நிறுத்துவதால் மட்டும் நினைவு கூரல் ஒரு பொதுசன நிகழ்வாகி விடாது. அதற்குமப்பால் சனங்களைத் திரட்ட வேண்டும். பங்குபற்றும் மக்களின் எண்ணிக்கையே அது பொதுசன நிகழ்வா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கின்றது. அதற்கு கிராம மட்டத்தில் வேலை செய்ய வேண்டும். அதன் பின் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதோடு உணவு அல்லது தாகசாந்தி ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
இதற்கு பணம் தேவை. அதாவது நினைவு கூரலை ஒரு பொதுமக்கள் நிகழ்வாகச் செய்வதென்றால் அதற்கு ஒரு பட்ஜெட் தேவை. அதை முன் கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.முதலில் எத்தனை பேரை திரட்டப் போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதற்குத் தேவையான பணத்தை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதன்பின் வடமாகாண சபையின் போக்குவரத்து அமைச்சு தேவையான வாகன ஏற்பாடுகளை அறிவிக்க வேண்டும். இது விடயத்தில் வற்றாப்பளை அம்மன் உற்சவத்தின் போது கோவில் நிர்வாகமும், போக்குவரத்து சபையும் எப்படி ஒருங்கிணைந்து செயற்படுமோ அப்படி ஒரு ஏற்பாட்டை மாகாண சபையும் சிந்திக்க வேண்டியிருக்கும்.
வடமாகாண சபை நினைவு கூரலை ஒழுங்குபடுத்தும் என்று அறிவித்தால் மட்டும் போதாது. நினைவு கூரலுக்கான ஒரு சமூக உளவியலை படிப்படியாகக் கட்டியெழுப்ப வேண்டும். நினைவு கூரல் எனப்படுவது ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. குறி;ப்பாக மே மாதம் தொடக்கத்திலிருந்து 18ம் திகதி வரை நினைவு கூரலுக்கான காலமாக அறிவிக்கப்பட வேண்டும். இக் காலப்பகுதியில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு பலமான காரணம் உண்டு.
நாலாங்கட்ட ஈழப்போரின் இறுதி மாதங்களில் ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் வரையிலுமான பொதுசன இழப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஏழாயிரத்து ஐநூறு என்று அறிவிக்கப்பட்டது. அந்நாட்களில் அப்பகுதியில் இயங்கிய இரண்டு ஊடகங்களான புலிகளின் குரலும்,ஈழநாதமும் ஏறக்குறைய அப்படியொரு எண்ணிக்கையைத்தான் கூறின. ஐ.நாவின் புள்ளி விபரங்களும் ஏறக்குறைய அதையொத்தவைதான். ஆனால் மே மாதத் தொடக்கத்திலிருந்து 18ம் திகதி வரையிலுமான காலகட்டத்தில்தான் உச்சமான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தன. இந்த எண்ணிக்கை பற்றி இது வரையிலும் சரியாகத் தெரியாது. ஐ.நாவின் ஓர் அறிக்கை மொத்த இழப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் என்று கூறுகிறது. மற்றொரு அறிக்கை அறுபதினாயிரம் என்று கூறுகிறது. இந்த தொகைகளிலிருந்து ஏழாயிரத்து ஐநூரைக் கழித்தால் வரும் தொகைதான் மே மாதத்தின் முதல் மூன்று கிழமைகளுக்குள்ளும் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையாகும்.
ஐ.நா அதன் அறிக்கைகளில் கூறப்பட்ட தொகையை எப்படிக் கணக்கெடுத்தது?என்று ஓர் ஐ.நா அலுவலரிடம் கேட்டேன். முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான லூயிஸ் ஆர்பருடன் வேலை செய்த ஓர் ஒஸ்ரேலியரான அவர் பின்வரும் தொனிப்பட பதிலளித்தார். ‘இப்படிப்பட்ட போர்க்களங்களில் பிரேத அறைகள் இயங்கா விட்டாலும் வைத்தியசாலைகள் ஏதோ ஒரு மூலைக்குள்ளாவது இயங்குவது உண்டு. அங்கு பிரேதங்கள் வராவிட்டாலும் காயப்பட்டவர்கள் கட்டாயமாகக் கொண்டு வரப்படுவர்;. அவ்வாறு வரும் காயப்பட்டவர்களின் காயங்களின் பருமன், ஆழம் என்பவற்றை வைத்து இப்படிப்பட்ட காயங்களுக்கு இவ்வளவு தொகை இறப்பு விகிதம் இருக்கும் என்று ஒரு புள்ளி விபரம் பெறப்படுவதுண்டு. கடைசிக்கட்டப் போரில் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்ட காயக்காரர்களை வைத்துப் பெறப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் தான் இழப்பு விகிதத்தை நாங்கள் கணக்கிட்டோம்’ என்று அவர் சொன்னார்.
நான் திரும்பக் கேட்டேன் ‘ஒருகட்டத்தில் வன்னிக்கு ஐ.சி.ஆர்,சி கப்பல்கள் வருவதும் நிறுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கு கடைசியாக மே 9ம் திகதி தான் கப்பல் வந்தது என்று அங்கு சேவையாற்றிய மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதன் பின் வன்னியிலிருந்து காயக்காரர்கள் மேலதிக சிகிச்சைக்காக வெளியுலகத்திற்கு அனுப்பப்படவில்லை. காயங்கள் புழுத்தும், அழுகியும் இறந்தவர்களே அதிகம்;. அக்காலப்பகுதியில் இறந்தவர்களைப் புதைத்தவர்களிற் பலரும் இறந்து போய் விட்டார்கள். முடிவில் 18ம் திகதிக்குப் பின்னரும்சாகாமலிருந்த வலிய சீவன்கள்தான் படைத்தரப்பால் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். இக்காலப் பகுதிக்குரிய புள்ளி விபரங்களை எங்கிருந்து பெறுவீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் ‘உங்களுடைய கேள்வி தர்க்கபூர்வமானது இப்போதைக்கு எந்த ஒரு புள்ளி விபரமும் இறுதியானதல்ல’ என்ற தொனிப்பட.
இப்படிப் பார்த்தால் ஈழப்போரில் ஒப்பீட்டளவில் அதிக தொகை பொதுசனங்கள் கொல்லப்பட்ட காலப்பகுதி அதுவெனலாம்;. அதாவது பெருந்தமிழ்ப் பரப்பின் நவீன வரலாற்றில் தமது இன அடையாளத்திற்காக அதிக தொகை மக்கள் கொல்லப்பட்டதும்குரூரமாக வதைக்கப்பட்டதும்அக்காலப் பகுதிக்குள்தான்;. எனவே தமிழ் மக்களின் நவீன வரலாற்றில் மிகக் கொடுமையான உத்தரித்த காலமாக மே 1லிருந்து 18 வரையிலுமான நாட்களைக் கூறலாம்.
இவ்வுத்தரி;த்த நாட்களை நினைவு கூரலுக்கான ஒரு காலகட்டமாக எடுத்துக் கொள்ளலாம். வடமாகாண சபை இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. எனவே அதற்கு ஒரு பொறுப்பு உண்டு. தன் அதிகாரத்திற்குட்பட்ட அரச அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் நினைவு கூரலை ஏற்கனவே தொடங்கியிருந்திருக்க வேண்டும். இது வெசாக் பண்டிகைக்காலம். எல்லா அரச அலுவலகங்களிலும் வெசாக் கூடுகளைக் காண முடிகிறது. 2009 மேக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் நடக்கும் வெசாக் கொண்டாட்டங்களைதனிய மத அனுஷ;டாங்களாகப் பார்க்க முடியாது.அவை ஒரே நாடு ஒரே தேசம் என்ற கொள்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் படைத்துறை அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான்.
எனவே நினைவு கூர்தல் தொடர்பில் மாகாண சபையும், ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும்.அதன்படி தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் அலுவலகங்களுக்கு நினைவு கூர்தலுக்கான உத்தியோக பூர்வ வழிகாட்டலைச் செய்திருக்கலாம். பள்ளிக்கூடங்களிலும் அதைச் செய்திருக்கலாம். உள்ளூர் ஊடகங்களை ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கலாம். ஊடகங்களில் தொடர்ச்சியாக இது தொடர்பான கட்டுரைகளையும், கலைப் படைப்புக்களையும் பிரசுரிப்பதற்கான ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கலாம். 18ம் திகதி ஒரு வேலை நாள். அந்நாளில் அரச ஊழியர்கள் நினைவு கூரலில் பங்கேற்பார்களா? இது தொடர்பில் மாகாணசபை ஏதும் முடிவுகளை எடுத்திருக்கிறதா?
மானுடத்தின் ஒன்றுகூடலை பெருமெடுப்பில் ஒழுங்கு படுத்தியவர் மாகாண அமைச்சராக இருக்கிறார்.அவர்தான் வைரமுத்துவை வன்னிக்கு வரவழைத்து விழா எடுத்தவர். அவரைப்போன்றவர்களுடைய ஆற்றலை ஏன் மாகாண சபை பயன்படுத்தக்கூடாது?
இவ்வாண்டு வெசாக் கொண்டாட்டம் வடக்கில் முன்னரை விட அதிகரித்தளவில் களை கட்டியது. அந் நாட்களில் யாழ் நகரப்பகுதியிலும், அதை நோக்கி வரும் சாலைகளிலும் பயணம் செய்ய முடியாத அளவிற்கு ஜனத்திரள் பெருகிக் காணப்பட்டது. குறைந்த பட்சம் அதேயளவு தொகை ஜனங்களையாவது நினைவு கூரலுக்கு ஒன்று திரட்ட முடியுமா என்பது சந்தேகமே. பெருந்தமிழ்ப் பரப்பில் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் பெருந்தொகைச் சனங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களை நினைவு கூரும் போது குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அதில் கலந்து கொள்வது என்பது யாருடைய தோல்வி? தேர்தல் அரசியலில் நாட்டம் காட்டாத தமிழ் மக்கள் பேரவை போன்ற அரசியல் இயக்கங்கள் நினைவு கூர்தலை ஏன் கையில் எடுக்கக் கூடாது? அதற்கென்று ஒரு பொதுக்குழுவை ஏன் உருவாக்கக் கூடாது?
இது போல சிந்தித்து திட்டமிட்டால்தான் நினைவு கூரலை ஒரு பொதுசன நிகழ்வாக நடத்தி முடிக்கலாம். இல்லையென்றால் கட்சிக்கு ஒரு கூட்டம் நடக்கும். அமைப்பிற்கு ஒரு கூட்டம் நடக்கும். மத நிறுவனங்கள் தனியே கூட்டங்களை நடாத்தும். பல்கலைக்கழகங்கள் தனியே கூட்டங்களை நடத்தும். மக்கள்திரள் சிதறுண்டு போகும். ஒரு பொது இடத்தில், ஒரு பொது நேரத்தில் பெருந்திரளான மக்களைத் திரட்டி கொழும்பிற்கும், வெளியுலகத்திற்கும் வலிமையான ஒரு செய்தியைக் கொடுக்கும் விதத்தில் நினைவு கூரலை ஒரு மக்கள் மைய நிகழ்வாக நடத்துவது எப்பொழுது? அதை யார் செய்வது?