சிங்கள, தமிழ் முஸ்லிம் இனங்களுக்கு சமூக நியாயத்தை நிறைவேற்றும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவரும் ஆட்சியமைக்க முடியாதெனவும் இன்று கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒரே நாட்டு மக்களாக அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி அனைத்து இனங்களிலுமுள்ள பிற்போக்குவாதிகள் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையின்மையை விதைக்க முயற்சியெடுக்கின்றனர் எனவும் அனைவரும் இது தொடர்பில் நுண்ணறிவுடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் போது இனம், மதம் அல்லது கட்சிக்குரியதென்பது முக்கியமானதல்ல என்பதுடன், தேவை மட்டுமே முக்கியமானதெனவும் ஜனாதிபதி; தெரிவித்தார்.