245
மேடையே இல்லாத கிளிநொச்சி சிவபாதகலையகம் பாடசாலையில் இருந்து முதல் முதலாக தமிழ்த் தினப் போட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட நாடகம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது. சிவபாத கலையகம் என்பது சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கலையகம் எனும் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் பெருமளவுக்கு தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளே கல்வி கற்று வருகின்றனர்.
மேடையே இல்லாத பாடசாலை ஒன்றில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நாடகமே முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. முதலியம் எனும் பெயரில் ஆசிரியர் க.விஜயசேகரம் என்பவரால் நெறியாள்கை செய்யப்பட்ட நாடகமே கோட்ட மட்டத்தில் வெற்றிப்பெற்று மாவட்ட மட்டத்திலும் வெற்றியை பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வரலாற்றில் தமிழ் தினப் போட்டி ஒன்றில் மாணவர்கள் பங்குகொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றி வெற்றிப்பெற்றுள்ளமை பிரதேச மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடை உள்ளிட்ட பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் செயற்படுகின்ற ஒரு பாடசாலையில் இவ்வாறு மாணவர்கள் வெற்றிப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவர்கள் தங்களது பாடசாலையிலிருந்து பத்து பன்னிரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள நகர்புற பாடசாலைகள் மற்றும் பண்பாட்டு மன்றங்களுக்கு சென்று பல நாட்களாக பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
கடந்த காலங்களில் குறித்த பாடசாலையில் இருந்து தமிழ் தினப்போட்டி உள்ளிட்ட இணைப்பாட செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றுகின்றமை மிக மிக குறைவாகவே இருந்து வந்துள்ளன. மாணவர்களிடம் ஆற்றல்கள் இருந்த போதும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது.
மாகாண மட்டத்திலும் தங்களது பிள்ளைகள் வெற்றிப்பெற வேண்டும் என்பதில் இப்பொழுதே மாணவர்கள் பெரும் ஆர்வத்தோடு காணப்படுகின்றனர்
Spread the love