முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பிடிக்கும் சாத்தியத்தை முழுமையாக மறுப்பதற்கில்லை என முன்னணி மனித உரிமை அமைப்புக்களில் ஒன்றான சர்வதேச அனர்த்தக்குழு (ஐ.சீ.ஜீ) தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மஹிந்தவின் மீள் பிரவேசத்தை முழுமையாக உதாசீனம் செய்து செயற்படக் கூடாது எனவும் பொருளாதார மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை போன்றன குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என்பதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் வடக்கு கிழக்கில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.