306
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு கோரி மாணவியின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள் அறிந்ததே.
எனது மகளது கொலை வழக்கானது ஊறுகாவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து வழக்கானது மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படவுள்ளதாக பத்திரிகை வாயிலாக கேள்வியுற்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
குறித்த விசாரணைகள் தமிழ் மொழியில் பரீட்சயமற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அறிந்தேன்.
யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த மான்பு மிகுந்த ஐனாதிபதியவர்கள் கடந்த 2015.05.26ம் திகதி என்னை வேம்படி மகளீர் கல்லூரிக்கு அழைத்து குறித்த வழக்கானது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடைபெற தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார். குறித்த உத்தரவாத்த்திற்கு முரணாக தற்போது இவ்வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படுவது எனக்கு மிகுந்த அதிர்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிற்கு வந்து தங்கியிருந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவது எனக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் வறுமையில் நாம் இருப்பதன் காரணமாக மிகுந்த பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதுடன் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் எனது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது.
நாம் சிங்கள மொழி பேச முடியாது இருப்பதால் தமிழில் எம்மால் வழங்கப்படும் சாட்சியங்கள் சிங்கள மொழியிற்கு மொழிபெயர்க்கப்படும்போது திரிபடையும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஊறுகாவற்துறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன்.
எனவே இவை அனைத்தும் எனது மகளின் இழப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி இவ்வழக்கு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்ளாது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கோருகின்றேன். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த கடிதமானது , பிரதம மந்திரி , பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் பிரதி அனுப்பப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love