191
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்த்த மாணவர்கள் கடந்த சில வாரங்களாக பாடசாலைக்கு செல்வதில்லை.
மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் சென்று தமது பிள்ளைகள் இந்த பாடசாலைக்கு கல்வி கற்க வருவது பாதுகாப்பு இல்லை எனவே பிள்ளைகளின் பாடசாலை விடுகை பத்திரத்தினை தருமாறு சுமார் 90 க்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர். அதற்கு பாடசாலை அதிபர் சம்மதிக்காத நிலையில் தற்போது பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்காது தடுத்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தர் ஆகியோர் பெற்றோர்களிடம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு கோரி சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் போதும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது பாதுகாப்பு இல்லை அதனால் நாம் வேறு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்ப உள்ளோம் என கூறியுள்ளனர்.
அதேவேளை குறித்த கிராமத்தில் உள்ள கிந்துசிட்டி எனும் மயானத்தை அகற்றுமாறு ஒரு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்னுமொரு தரப்பினர் அந்த மயானம் வேண்டும் என கோரி மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதனை அடுத்து நீதிமன்றம் மயானத்தை சுற்றி 10 அடி உயரமான மதிலினை கட்டி மயானத்தில் சடலங்களை எரிக்கும்மாறும் எதிர்வரும் ஒரு வருட காலத்திற்குள் குறித்த மயானத்தில் மின்சாரம் மூலம் சடலங்களை எரிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மயான பிரச்சனையின் பின்னணியில் தான் பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவது இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மயானத்தை சுற்றி சுற்று மதில் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளியான சிறுப்பிட்டியை சேர்ந்த பாஸ்கரன் கமல்ராஜ் (வயது 28) என்பவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Spread the love