அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையாளரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தேர்தல் ஆணையாளரிடம் பிரமாண பத்திரமும், கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதன் பின்னர் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.
சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகின்றதுடன் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதையும், அவரால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையகத்தில் மனு அளித்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று தேர்தல் ஆணையகத்திடம் 175 பக்கங்களில் பிரமாண பத்திரம் மற்றும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர்.