ஏசி பஸ்சில் படம் பார்த்துக் கொண்டு கொழும்புக்கு போய் வாரது எண்டால் அதை விட சுகம் எதிலும் இல்லை பாருங்கோ. ஆனால் ரிக்கெட் எடுத்தும் ஓசியில போறது போல எல்லோ ஏசி பஸ் நடத்துனர்கள் பயணிகளை நடத்துகிறார்கள். நடத்துனர்கள் அப்படி நடந்தாலும் பயணிகள் ஏசி பஸ்சில் தான் கொழும்புக்கு போய் வருவம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அப்பத் தான் தமக்கு கௌரவம் என்றும் சொல்லுகிறார்கள். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகத் தான் ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு தான் கோதுமை மா என்று அளந்து மக்களுக்கு வழங்கினார்கள். அப்பொழுது பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்கள் மக்கள் தங்களிடம் தான் கண்டிப்பாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் தங்களைவிட ஆட்கள் இல்லை என்று நடத்தத் தொடங்கினார்கள். கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நீங்கியதும் மக்கள் சங்கக் கடையை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதேபோல் தான் பயணகள் ஏசி பஸ்சை திரும்பிக் கூட பார்க்க முடியாத காலம் வரும்.
உள்ளுர் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் ஏறிய பயணிகளை பின்னுக்கு போ பின்னுக்குப் போ என்று சாகடிக்காமல் சாகடிப்பார்கள். பஸ்சில் இருந்து பயணிகள் தோட்டதில மம்பட்டி பிடித்து நிலம் கொத்திவிட்டு வேர்க்க வேர்க்க வருவது போல் இறங்குவார்கள். கொழும்பு பஸ்களில் ஏறும் பயணிகளை சீற் மாத்தி மாத்தியே கொல்லாமல் கொன்றுவிடுவார்கள். இதனால் தமக்கான சீற் எது என்று பயணிகள் கேட்பதிலே பஸ் கொழும்பு போய்ச் சேர்ந்துவிடும். இது தான் பஸ் ஓடுபவர்களின் தந்திரம். இந்த தந்திரம் உழைப்புக்காக என்றாலும் நாளடைவில் அந்த உழைப்பை இல்லாமலும் செய்து விடும் என்பதை பஸ் உரிமையாளர்கள் மட்டுமல்ல நடத்துனர்களும் சிந்திக்க வேண்டும். பயணிகள் மனவேதனை அடைந்து பயணம் செய்தால் மறுபடியும் அந்த பஸ்சில் ஏறமாட்டார்கள் என்பது உண்மை.
கடந்த வெள்ளிக்கிழமை 12 ஆம் திகதி NO—S..C 87… N.G EXPRESS ஏசி பஸ்சில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவருக்கு நடந்த சம்பவத்தை எவராலும் மன்னிக்க முடியாது. இந்த பஸ்சில் யாழ்ப்பாணம் வருவதற்காக கடந்த 10 ஆம் திகதி புதன்கிழமையே 6ஆம் இலக்க சீற்றை பதிவு செய்துள்ளார். நாளும் வந்தது இரவு 7 மணி இருக்கும் இந்த பஸ் தரித்து நிற்கும் இடத்துக்கு சென்று பஸ்சில் ஏறி பதிவு செய்த 6 ஆம் இலக்க சீற்றில் அமர்ந்தார். ஏனைய சீற்றில் இருக்க வருபவர்கள் தனக்கு தெரிந்தவர்கள் யாரும் வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி தெரிந்தவர்கள் எவருமே வரவில்லை.
சரி அயர்வோம் என்று சீற்றை சரித்து சரிந்த போது ஒருவர் வந்து இது உங்கள் சீற்ரா என்று ரிக்கெட்டை காட்டச் சொல்லிக் கேட்டார். அவரோ தனது ரிக்கெட்டை காட்டினார். அக்கம் பக்கம் பார்த்து நீங்கள் அந்த சீற்றில் போய் இருங்கோ என்று சீற் இருந்த றைவர் பக்கம் கையை நீட்டிக் காட்டினார். எதற்காக நான் அந்த சீற்றில் போய் இருக்கனும் என்று அவரோ ஒரு தடவை தனது ரிக்கெட்டை பார்த்து சீற்றையும் பார்த்து சரிசெய்தார். பதிவு செய்த சீற்றில் தானே நான் இருக்கிறேன் எதற்காக 2 ஆம் நம்பர் சீற்றில் இருக்கச் சொல்லுகிறார் என்று பார்த்த போது பம்பலப்பிட்டியில் இரு பெண்கள் பஸ்சில் ஏறி வருகிறார்கள். அவர்களுக்காக இந்த சீற்றை விடச் சொல்லி ரிக்கெட் பரிசோதித்தவர் அவரை மிரட்டி கேட்பது அவருக்கு ரியூப் லைட் போல பிந்தித்தான் புரிந்தது. அவரோ பேசாமல் இருந்துவிட்டார்.
மீண்டும் அந்த ஆள் நான் சொல்வது கேட்கவில்லையோ என்று கேட்க அவரோ இது எனது சீற் என்றதும் இருவருக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டது. ரிக்கெட் கேட்டவரோ இது என்னுடைய பஸ் உன்னை நடுவழியில் இறக்கிவிட்டுப் போய் விடுவேன் என்று அவரை மிரட்டினார். அவரோ தம்பி நான் சீற்றை பதிவு செய்து காசு கொடுத்துத் தான் வாரன் சும்மா வரவில்லை. என்றார். இரு பெண்களுக்காக ரிக்கெட் பரிசோதித்தவர் அவருடன் கடுமையாக சீற்றை விடச் சொல்லி கடுமையாக பொங்கினார். ஆனாலும் முடியவில்லை. அவரை அந்த சீற்றில் இருந்து அடாத்தாக எழுப்ப. முயற்சி செய்தும் அவரோ துணிச்சல் மிக்கவராக இருந்ததால் அந்த இரு பெண்களை வேறு சீற்றில் இருத்தினார்.
யாழ்.கொழும்பு பயணிகள் போக்குவரத்து பஸ்களை ஓடுபவர்கள் தமது பஸ்சில் ஏறுபவர்களுடன் அன்பாக பேசி பழகினால் தான் மறுபடியும் இதே பஸ்சில் ஏறுவதற்கு பயணிகள் முண்டியடிப்பார்கள். NO—S….C 87…. N…..G EXPRESS பஸ்சில் இப்படி காட்டு மிராண்டித்தனமாக நடந்த நடத்துனரை தொடர்ந்து இந்த பஸ்சில் நடத்துனராக பஸ் உரிமையாளர் வைத்திருப்பார் ஆயின் இந்த பஸ்சில் பயணிகள் ஏறுவதற்கு தயங்குவார்கள். சொல்லுறது ஒன்று செய்யிறது ஒன்று இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமல்ல பஸ் உரிமையாளரும் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.