இனவாத அமைப்புக்களின் செயற்பாடே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியிழக்க பிரதான ஏதுவாக அமைந்தது என புதிய அரசியல் சாசனத்திற்கான தேசிய அமைப்பின் உறுப்பினர், மனித உரிமை செயற்பாட்டாளர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் காரியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலப் பகுதியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்ட சில தலைவர்கள் சிறுபான்மை சமூகத்தின் மீது இனவாத அடிப்படையில் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர் இந்த இனவாத செயற்பாடுகளே மஹிந்த தோல்வியைத் தழுவ காரணமாகியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசார தேரர் தலைமையில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது எனவும் இது அப்போதைய அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ள அவர் எனினும் தெற்கின் சிங்கள பௌத்த மக்கள் இனவாத அரசாங்கங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரசிங்கவும் காட்டி வரும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டிய காமினி வியான்கொட எனினும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பல்வேறு காரணிகள் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுனார்.