சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என நோபல் பரிசு பெற்ற திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பாக பெங்களூரில் ‘புரட்சியாளர் அம்பேத்கரும், சமூக நீதியும்’ என்ற சர்வதேச கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கிவைத்த இந்த கருத்தரங்கில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இங்கு உரையாற்றிய நோபல் பரிசு பெற்ற திபெத் பௌத்த இயக்க தலைவர் தலாய் லாமா, “நான் என்னை இந்தியாவின் மகனாகவே உணர்கிறேன். எனது மூளையிலும் இதயத்திலும் உள்ள செல்கள் அனைத்திலும் பண்டைய இந்தியாவில் இருந்து எழுந்த அறிவு இயக்கங்களின் போதனைகளே நிரம்பியுள்ளன. இந்தியாவில் தோன்றி உலகிற்கே பெரும் வழிகாட்டியாக திகழும் புத்தரின் சிந்தனைகளே என்னை வழிநடத்துகின்றன. புத்தரின் அறிவொளி பட்டதாலே இருண்ட திபெத் மலைகள் ஒளிரத் தொடங்கின.
புத்தர் போதித்த அன்பு, அறிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையே புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதினார். உலகமே வியக்கும் வகையில் சட்டம் இயற்றிய அம்பேத்கர், ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற நூலை எழுதி சமூக நீதியை பறைசாற்றினார். சாதி, மதம், மொழி, இனம் என எல்லாவித பேதம் கடந்த மானுடத்தை நிறுவ அம்பேத்கர் விரும்பினார்.
புத்தர், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் தோன்றிய இந்திய மண்ணில் சாதி கொடுமை நிலவுவது அவமானகரமானது. சாதியின் பெயரால் ஒருவருக்கொருவர் பாகுபாடு பார்ப்பது துயரமானது. சாதி பாகுபாட்டின் காரணமாக எழும் சச்சரவுகள், வேற்றுமைகள், கெட்ட எண்ணங்கள் தனி மனிதர்களை மட்டுமல்லாமல் சமூகத்தை சீரழித்துவிடும்.
ஒரே மாதிரியான ரத்தம், சதை, மூளை, இதயம் கொண்ட மனிதர்கள் ஒருவரை அடிமைப்படுத்துவது முட்டாள்தனமானது. சக மனிதர்களை அடிமைப்படும் சாதி அமைப்பை ஒழிக்காமல் சமூகம் முன்னேற முடியாது. மக்களிடையே கெட்ட எண்ணங்களை வளர்த்தெடுக்கும் சாதியை அழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. உலக அளவில் வேகமாக வளரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி, பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.
தலித் மக்கள் அனைவரும் அம்பேத்கரைப் போல சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். திடமான தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, விடாமுயற்சியுடன் சாதியை எதிர்த்து போராட வேண்டும். அடிமட்ட நிலையில் தவிக்கும் தலித் மக்கள் மேலெழுந் தால் மட்டுமே, ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி அடையும்” எனத் தெரிவித்துள்ளார்.