மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தடுக்க விசேட காவல்தறை பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இனவாத, மதவாத அடிப்படையில் திட்டமிட்ட வகையில் ஏனைய மதத்தவர்களை துன்புறுத்தி வன்முறைகளை ஈடுபடும் தரப்பினரை தடுத்து நிறுத்த இந்தப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பூரண அதிகாரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காவல்துறைப் பிரிவில் காவல்துறைத் திணைக்களத்தின் தகுதியான அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். மதத் தளமொன்றின் மீது தாக்குதல் நடத்தினால் அல்லது இன ரீதியான குரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக விரைந்து சென்று அதனை தடுக்கவும் கலகத்தில் ஈடுபடுவோரை தடுக்கவும் இந்தப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சரின் வழிகாட்டல்களின் அடிப்படையில் காவல்துறை மா அதிபர் இந்தப் பிரிவினை நிறுவ உள்ளார். இதேவேளை, மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோர், இன வன்முறைகளைத் தூண்டுவோர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசேட அறிக்கை ஒன்றை வழங்க உள்ளனர்.