யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம், யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.
ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில், ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிலைநிறுத்தப்படக் கூடாது என கோரியுள்ளார். ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57 படைப் பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.