அரசியல் காரணங்களால் மத்திய மாநில அரசுகள் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுப்பதால் இந்த விவகாரத்தில் தலையிடுமாறு, ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் திகதி, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக சிபிஐ புலனாய்வு செய்து, கொலையில் தொடர்புடையவர்கள் என்று 26 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நளினியின் மரண தண்டனையை தமிழக ஆளுனர் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.
ஐநாவிற்கு கடிதம்:
ஆனால் தொடர்ந்து நளினி தன்னை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திற்கு நளினி 6 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பாகுபாடு:
அதில் தன்னுடைய விடுதலையில் மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டுவதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் சிறையில் உள்ளேன். ஆனால் நன்னடத்தை காரணமாக கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் நடைமுறையை மாநில அரசு வைத்துள்ளது.
அரசியல் ரீதியிலான அணுகுமுறை
16 ஆண்டுகளுக்கு முன்பே நான் இதற்கு தகுதி பெற்றுவிட்டாலும் என்னை முன்கூட்டியே விடுதலை செய்யாமல் ராஜூவ் காந்தி படுகொலையில் தொடர்பு என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் ரீதியாக என்னுடைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்டப்படி நான் விடுதலையாக எந்தத் தடையும் இல்லை, ஆனால் அரசியல் காரணங்களாலேயே நான் இன்னும் பாதிக்கப்படுகிறேன்.
வலியுறுத்தல்
எனவே சட்டம் 72 மூலம் மனித உரிமைகள் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நளினி கோரியுள்ளார். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே 1965ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி நளினி இந்த கடிதத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்கு எழுதியுள்ளார்.