சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 3 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மின்சார துண்டிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையின் 1987, இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் 1910 அல்லது 1901 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரியப்படுத்துமாறு அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் கொழும்பின் பல பாகங்களில் மின்விநியோக தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் பாதுகாப்பு கருதி பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களை குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.