இலங்கையின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மே 17 இயக்க தலைவர் திருமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழர்கள் அதிகளவில் தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட அராஜகம், மனிதாபிமானமற்ற தாக்குதல்களை இன்றும் யாரும் மறந்துவிட முடியாது. பெண்களை மானப்பங்கப்படுத்தி, நிர்வாணப்படுத்தி கொன்றனர்.
இந்த வரலாற்றுத் துயரை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை மெரினாவில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மெரீனாவில் கூடுவதற்கு பொலீஸார் தடைவிதித்தனர். அதையும் மீறி மே 17 இயக்கத்தினர் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரை கைது செய்த போலீஸார் அவர்களை 14-ஆவது குற்றவியல் நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஆஜர்படுத்தினர். 17 பேரையும் வரும் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் திருமுருகன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது திருமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொலீசார் தெரிவித்தனர்.
திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
திருமுருகன் காந்தி மீது மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதாக சென்னை மாநகர பொலீஸார் தெரிவித்துள்ளனர். திருமுருகன் காந்தியுடன் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் அனுமதிக்கப்பட்டு, அமைதியான முறையில் நடைபெற்று வந்திருக்கிறது. இதே சென்னை மாநகர காவல்துறைதான் அதற்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வந்தது.
ஆனால் அதிமுக அரசின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் சரி, இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் சரி மெரினா கடற்கரையை ஏதோ ஒரு கலவர பூமி போன்ற தோற்றத்தை வெளிநாட்டவருக்கும், உள்நாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சித்தரித்து வருவது வேதனையளிக்கிறது.
கடற்கரையில் அமைதியாக மக்கள் கூடுவதையும் தடுத்து வருகிறார்கள். அமைதியாக நடைபெறும் இது போன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளையும் அனுமதிக்க மறுத்து, குண்டர் சட்டத்தை பிரயோகம் செய்வது தமிழகத்தில் பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் நிகழ்வாகவே கருதுகிறேன். ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எதிராக காவல்துறை அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவது கொடுமையான அதிகார துஷ்பிரயோகம்.
அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் அடிக்கடி 144 தடையுத்தரவு பிறப்பிக்கும் காவல்துறையின் போக்கு அதிர்ச்சியளிக்கிறது. அது மட்டுமின்றி மெரினா கடற்கரை முழுவதும் ஆங்காங்கே போலீஸாரை குவித்து வைத்து மக்களை பீதியில் உறைய வைப்பது அதிமுக அரசின் விநோதமான அரசு நிர்வாக நடைமுறையாக இருக்கிறது.
மத்தியில் உள்ள பாஜக அரசின் பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசு ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பிறகு மெரினா கடற்கரையில் ‘அறிவிக்கப்படாத எமெர்ஜென்ஸியை’ அடிக்கடி அமல்படுத்தி கருத்து சுதந்திரத்தின் குரல் வளையில் காலை வைத்து மிதித்திருக்கிறது.
சமீபத்தில் இலங்கை சென்ற பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதைப் பற்றிக் கூட எந்த கருத்தையும் சொல்லாமல் இருந்த அதிமுக அரசு இப்போது போரில் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்றதற்காக திருமுருகன் காந்தி போன்றோரை குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பதைப் பார்த்தால் மத்தியில் உள்ள பாஜக அரசின் கட்டுப்பாட்டில் முதல்வரும், அதிமுக அமைச்சர்களும் மட்டுமின்றி, காவல்துறை அதிகாரிகளும் வந்து விட்டதையே காட்டுகிறது.
திரைமறைவில் இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை மத்தியில் உள்ள பாஜக அரசு இப்படி ஆட்டுவித்துக் கொண்டிருப்பதும், அந்த அரசை வாக்களித்த மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஆகவே திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
ஜனநாயக உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைதி வழிப் போராட்டங்களை ஒடுக்க இப்படி காவல்துறையினரின் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும், காவல்துறையை தனது ஏவல் துறையாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை அதிமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: திருமாவளவன், சீமான், கவுதமன் கடும் கண்டனம்!
‘மே 17’ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு திருமாவளவன், சீமான் மற்றும கவுதமன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் காந்தி மீது மத்திய அரசு அலுவலகத்தைத் தாக்கியது உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதாக சென்னை மாநகர போலீஸ் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தியுடன் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த 21-ம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
4 பேர் மீது குண்டர் சட்டம்
தற்போது அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
கவுதமன் விமர்சனம் :-
திருமுருகன் காந்தி குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது நேர்மையற்ற செயல் என்று இயக்குனர் கவதமன் தெரிவித்துள்ளார். இன உரிமைக்காக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சீமான் ஆட்சேபணை
இதே போன்று மத்திய அரசுக்கு பயந்து மாநில அரசு நடவடிக்கை எடுப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் இனத்திற்காக போராடுபவர்களுக்கு எதிராக செயல் என்றும் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 comments
மே 17 இயக்கத்தின் தலைவர் திரு முருகன் குண்டர் சட்டத்தில் கைது , தமிழக தலைவர்கள் கடும் கடும் கடும் கண்டனமாம் , எல்லா கட்சியினரும் ஒன்றாக இணைந்து இப் போராட்டத்தை நடத்தியிருந்தால் கேடியாலோ கேடியின் கைக் கூலிகளாலோ இப்படியான ஒரு கைதை நடத்தியிருக்க முடியுமா ? ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்தாவது திருந்தியிருக்க வேண்டாமா , அல்லது தமிழர்களுக்கு எதிராக கன்னட வெறிக்கூட்டம நடத்தும் போராட்டத்தை பார்த்தாவது சிந்தித்து இருக்க வேண்டாமா , மயிலே மயிலே இறகு போடு என்றால் ஆரிய மயில்கள் ஒரு போதும் போடப் போவதில்லை அது ஹிந்தி ஆரியனாக இருந்தால் என்ன சிங்கள ஆரியனாக இருந்தால் என்ன , நீங்கள் ஒரீசா , நாகர்லாந்து , அசாம் , காஸ்மீர் பஞ்சாப் போன்ற மா நிலங்களைப் போன்று வேட்டை நாய்களாகா மாறாதவரை தமிழன் அடிமையே அடிமைதான், ராஜன்.
ஆரியன் என்றால் யார் விளக்கம் தருவீர்களோ?