வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 6 நாட்கள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நேற்று தொடங்கிய இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நேற்றிரவு அவர் ஜெர்மனியை சென்றடைந்தார்.
ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மோடி அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்தார். விருந்தினர் இல்லத்தில் உள்ள தோட்டத்தில் இருவரும் நடந்து சென்று பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜெர்மனின் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்டைன்மரையும், மோடி சந்தித்து உரையாட இருக்கிறார். பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா-ஜெர்மனி இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, நகர்ப்புற கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
ஜெர்மனி பயணத்தின் பின் பிரதமர் நரேந்திர மோடி ஸ்பெயினுக்கு புறப்பட்டு செல்கிறார். ராஜீவ் காந்திக்கு பின் கடந்த 30 ஆண்டுகளில் ஸ்பெயினுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அங்கு அவர் ஸ்பெயின் மன்னர் 6-ம் பெலிப் மற்றும் அதிபர் மரியானோ ரஜோய் ஆகியோருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி 31-ந் தேதி ரஷியாவுக்கு செல்கிறார். அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, 18-வது இந்தியா-ரஷியா உச்சிமாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். குறிப்பாக அதிபர் புற்றினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை, இருநாட்டு அதிகாரிகளுடன் மோடி-புற்றினின் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 2-ந் தேதி பிரான்ஸ் செல்கிறார். 3-ந் தேதி வரை அங்கு தங்கியிருக்கும் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதிக்கின்றனர்.