170
இதுகால வரையிலும் இல்லாத வகையில் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளம் மற்றும் மண்சரிவு இடர் நிலைமை அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனர்த்தத்தில் இதனை எழுதும் வரையில் 202 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேநேரம் 96 பேரைக் காணவில்லை என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்திருக்கின்றது.
காணாமல் போனவர்கள் சடலங்களாக மீட்கப்படுவதையடுத்தே இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது. இந்த வகையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர் இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரிடரிலேயே அதிக எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள். பொதுமக்களின் வீடுகள் சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் பேரிடர் ஏற்படுவதற்கு முன்னர் பதட்டமான ஒரு சூழலில் நாடு சிக்கியிருந்தது. முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியிருந்தனர்.
தன்னிகரற்ற வகையில், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் வீதிகளில் கர்ச்சனை செய்து கொண்டிருந்தார். அவர் கக்கிய இனவாத மதவாத விஷம் காரணமாகவே பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்தது.
தடுப்பார் எவருமின்றி இஸ்டம்போல இனவாதத்தைக் கக்கிய ஞானசார தேரரின் செயற்பாடுகளை முன்னைய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. அவரைக் கட்டுப்படுத்தி, குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் உயிர்ப்பாதுகாப்பு குறித்து ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்குவதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
சிறிது காலம் அமைதியாக இருப்பதாகப் போக்கு காட்டிய ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தையும் மதவாத்தையும் கிளப்பியபோது ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச அரங்கிலிருந்து எழுந்த அழுத்தங்களையடுத்து, ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு பொலிசாருக்கு பணித்திருந்தது.
தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த ஞானசார தேரர் திடீரென தலைமறைவாகினார். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றமும் விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
அரசியலில் தீவிரமான பௌத்த மத ஆதிக்க செல்நெறி போக்கைக் கொண்ட சூழலில் ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு அரசாங்கம் பிறப்பித்திருந்த உத்தரவையடுத்து, அவருடைய ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்திருந்தனர். அவர் கைது செய்யப்பட்டால் நாட்டில் கலவரம் வெடிக்கும் என அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.
இந்த நிலையில் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பினர், பாதுகாப்பு காரணமாக அவர் மறைவான ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கின்றார் என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை. ஆனால் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் குழுக்கள் அவரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காகக் களத்தில் இறக்கப்பட்டிருந்தன.
அவர்; எந்த வேளையிலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நாட்டில் பரவலாகக் காணப்பட்டது. இதனால், அவருடைய இனவாதச் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதற்கு ஆதரவான நிலைமை ஏற்பட்டிருந்தது. அதேவேளை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அந்த நடவடிக்கைக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்திருந்தன.
அப்போது மறைவிடத்தில் இருந்து அவர் வழங்கிய ஒரு நேர்காணலில் தான் நினைத்தால் நாட்டில் ஒரு நாளில் கலவரத்தை ஏற்படுத்திவிட முடியும் என அவர் கூறியிருந்தார். ஆயினும் அத்தகைய கலவரத்தின் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஞானசார தேரரை பொலிசார் கைது செய்தால் நாட்டின் அரசியல் சூழலில் என்ன நடக்கும் என்ற பதட்டமான கேள்வி தென்னிலங்கையில் தலையெடுத்திருந்த போதுதான் திடீரென மழை கொட்டியது. வெள்ளம் பெருக்கெடுத்தது. மலைப்பாங்கான இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன பலர் உயிரிழந்தார்கள். பலர் காணாமல் போனார்கள். வேறு பலர் காயடைந்தார்கள். வீடுகள் அழிந்தன. சரிந்து வந்த மண் வீதிகளை மூடியது. வீடுகள் இருந்த அடையாளமே இல்லாமல் செய்தது. மண்ணில் பலர் புதையுண்டு போனார்கள். வெள்ளம் எங்கும் சூழ்ந்தது.
போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சொத்துக்கள் அழிந்தன. சேதங்கள் அதிகமாகின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் பலர் தவித்தனர். உணவில்லை. குடிப்பதற்குக் குடிநீர் இல்லை. வைத்திய வசதிகள் பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினார்கள். நாட்டின் தென்பகுதியில் பேரவலம் சூழ்ந்தது.
மண்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இராணுவத்தினரும் மீட்புப் பணியாளர்களும் முனைப்புடன் ஈடுபட்டார்கள். விமானப்படையினர் ஹெலிக்கப்டர்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார்கள்.
இந்தியா மூன்று கப்பல்களில் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. சீனாவும் பாகிஸ்தானும்கூட நிவாரண உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனதாபிமான ரீதியில் உதவ பாதிக்கப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களைச் சேகரிக்கும் பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் பேரிடரில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதிலும், அவர்களைப் பராமரிப்பதிலும் கூடிய கவனம் செலுத்திச் செயற்படத் தொடங்கியிருந்தது.
இதனால் ஞானசார தேரரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டால் என்ன நடக்குமோ என்ற எண்ணமும், அதனால் ஏற்பட்டிருந்த அரசியல் ரீதியான பதட்டநிலையும் திசைமாறிப் போயின.
ஆனாலும், இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் அரசியல் ரீதியான மன உணர்வில் மாற்றத்தைப் பெரிய அளவில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நிலைமையைத் தெளிவுபடுத்த முயல்வதைப் போன்று, கவிதையொன்று முகநூலில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
சிங்கள நண்பா என விளித்து எழுதப்பட்டுள்ள அந்தக் கவிதை, உங்களுக்காக அழுவதற்கு நான் தயார், ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை என்று கவலையோடு குறிப்பிடுவதைப் போன்று ஆரம்பிக்கின்றது.
உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!
உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!
முடியவில்லை என்னால்;
காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான்
அவற்றை நீ வெட்டிவிட்டாயே!
நீ மறந்திருப்பாய்.
என்னால் மறக்கமுடியவில்லை.
காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! என்று அந்தக் கவிதைத் தொடர்கின்றது.
முன்னைய நிகழ்வுகளை நினைவூட்டி, இப்போது எதுவும்ட செய்ய முடியாமல் இருக்கின்றது என குறிப்பிடுகின்றது.
நினைவிருக்கிறதா உனக்கு..
நீ மறந்திருப்பாய்.
நீ கொலைவெறியோடு விரட்டும் போது;
ஒரு கையில் குழந்தையும்
இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம்.
நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்
உனக்காய் அழமாட்டமா?
மன்னித்துவிடு சகோதரா…
எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!
நீ தண்ணீரில் தான் தத்தளிக்கிறாய்
நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!
நாளை இந்த வெள்ளம் வற்றி நீ நலம் பெறுவாய்!
உனக்காய் உலகமே வரும்!
குற்றுயிராய் நந்திக்கடலில் மூழ்கியபோது;
எனக்காய் யாரும் வரவும் இல்லை
இனியும் வரவும் மாட்டார்கள்.
இனி வரவும் தேவையில்லை!
சிங்கள சகோதரா!
உனக்காக நான் அழுவதற்கு தயார்
ஆனால் என்னிடம் கண்ணீர் கைவசம் இல்லை………..
என அந்தக் கவிதை இன்னும் நீண்டு செல்கின்றது.
புனை பெயரில் எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதையை சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்து தென்பகுதி மக்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் கூடவே விடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் கவிதைக்கு ஒரு பதில் பதிவிடப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது.
இயற்கைப் பேரிடரில் சக பிரஜைகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர்களுக்காக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து முழு அளவிலான அனுதாபமும், உதவுகின்ற மன நிலைமையும் காணப்படவில்லை என்பதையே இந்த முகநூல் பதிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய மன உணர்வை ஏற்க மறுத்து, கடுமையாக விமர்சிக்கின்ற மனப்போக்குடையவர்களும் இல்லாமல் இல்லை. வஞ்சிக்கப்பட்டிருந்தாலும்சரி, மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகச் செய்திருந்தாலும்சரி, மனிதாபிமானத்தை இழப்பது அழகல்ல என்பது அவர்களுடைய வாதம்.
துன்பத்தில் உழன்றவர்களுக்கே துன்பத்தில் உள்ளவர்களுடைய கஷ்டங்கள் புரியும். எனவே, துன்பத்திலும், கஷ்டத்திலும் உழல்பவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவி புரிவதே மனிதப்பண்பாக இருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
மனதாபிமானமற்ற முறையில் ஒரு தரப்பினர் செயற்பட்டதன் காரமணாகவே மறுதரப்பினர் மோசமான பாதிப்புகளுக்கும் பேரழிவுக்கும் மோசமான உயிரிழப்புகளுக்கும் உள்ளாகினர் என்பதை மறுக்க முடியாது. அதற்காக துன்பத்திலும் கஸ்டத்திலும் ஆழ்ந்திருக்கும்போது, முன்னர் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு உதவ மறுப்பது மனிதாபிமானமுள்ள செயற்பாடாகாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அவ்வாறு செயற்படுவதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் போய்விடுமே என்பது அவர்களுடைய ஆதங்கமாகும்.
அதேவேளை, அவர்கள் மற்றுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள் . தென்னிலங்கையில் இயற்கைப் பேரிடரினால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது, தமிழ் அரசியல் தலைவர்கள் அது குறித்து அனுதாபம் எதனையும் உடனடியாக வெளியிடவில்லையே என்பதையும் அவர்கள் கவலையோடு சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள் .
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரண பொருட்களைச் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் பல தரப்பினராலும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. அரசாங்க கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், அரச செயலகங்களும் நிவாரண பொருட்களைச் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஆயினும் பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரிய அளவில் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தென்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வடக்கில் பெரிய அளவில் மன நெகிழ்வு ஏற்படாமைக்கு, யுத்த காலத்தில் தென்பகுதி மக்களிடமிருந்து மனிதாபிமான ரீதியிலான மன உணர்வுகள் வெளிப்படாமையே காரணம் என கூறப்படுகின்றது. அத்துடன் யத்த மோதல்களில் சிக்கி பெரும் கஸ்டங்களையும் மனித பேரவலத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் முகம் கொடுத்திருந்தபோது, தென்பகுதி மக்கள் ஆளுந்தரப்பினரின் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்பு சிந்தனைப் போக்கில் மூழ்கியிருந்தனரே தவிர, மனிதாபிமான சிந்தனை அவர்களிடம் ஏற்பட்டிருக்கவில்லையே என சுட்டிக்காட்டப்படுகின்றது. இத்தகைய ஒரு நிலையில் என்ன செய்வது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் நடத்தி வருகின்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின் 100 ஆவது நாளையொட்டி, நடத்தப்படுகின்ற போராட்டமும், இந்த நிவாரண உதவி நடவடிக்கையை மழுங்கடிக்கச் செய்திருக்கின்றது என கூறப்படுகின்றது.
கிளிநொச்சியில் மட்டுமல்ல. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய வடமாகாண மாவாட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக கவனயீர்ப்பு அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்தப் போராட்டங்களும் நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
இதைவிட முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு, கிளிநொச்சி மாவட்டம் பூனகரி பிரதேசத்தில் உள்ள இரணைதீவு ஆகிய இடங்களில் உள்ள தமது பூர்வீக வாழ்விடங்களைக் கொண்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று வேலையற்ற பட்டதாரிகளும் யாழ்ப்பாணத்தில் முடிவில்லாத போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
ஒரு போராட்டச் சூழலில் சி;க்கியுள்ள வடமாகாணத்தின் மக்கள் மனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்காகப் போராடுகின்ற மனநிலையில் ஆழ்ந்து கிடக்கின்றன. அவர்களுடைய போராட்டங்களை அரசாங்கம் கண்டும் காணாதது போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தென்பகுதியில் பேரிடரில் சிக்கியுள்ள மக்களின் அவலங்கள் துன்பங்கள் என்பன அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதில் வலுவற்று போயிருப்பதாகவே தெரிகின்றது.
இத்தகைய சூழலில் யாழ் நகரில் பொலிசார் கடைகடையாகச் சென்று தென்பகுதியில் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களைச் சேகரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.
பொலிசாரின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட வர்த்தகர் ஒருவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது மனிதாபிமானமுள்ளவர்களுடைய கடமையாகும். ஆனால் சட்டத்தையும் ஒழங்கையும் நிலைநாட்டுகின்ற பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார், 30 வருட யுத்தத்தினால் பாதி;க்கப்பட்ட பிரதேசத்தில் தமது மக்களுக்காக நிவாரண பொருட்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதை உண்மையான மனிதாபிமானச் செயற்பாடாக ஏற்க முடியாமல் இருக்கின்றது என குறிப்பிட்டார்.
மண்சரிவினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கூடாது என நான் கூறவில்லை. அந்த உதவி பணியில் பொலிசார் ஈடுபட்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. யுத்த காலத்தில் எமது மக்கள் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்தபோதும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகப் போராடிய போதும் இந்தப் பொலிசார் தமது பிரதேசங்சகளில் இருந்து எம் மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்று வந்து உதவினார்களா, இல்லையே…….. அவர்களுடைய இந்தச் செயற்பாட்டில் மனிதாபிமானத்தை என்னால் காண முடியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்க மனோபாவம் கொண்ட செயற்பாடாகவே அதனை நான் காண்கிறேன், என்று அவர் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
எதிலும் அரசியல் எங்கும் அரசியல் என்ற போக்கில் சென்றுகொண்டிருகின்ற இந்த நாட்டில், அனர்த்தங்கள் பேரிடர்களின் பின்னரான மனிதாபிமானத்திலும் கூட அரசியல் வலிந்து கலந்திருப்பதையே காணவும் உணரவும் முடிகின்றது.
Spread the love