அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன பிரித்வி 2 ஏவுகணை ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே உள்ள சந்திப்பூரில் நேற்று பிரித்வி 2 ஏவுகணை சோதனையில் ராணுவம் ஈடுபட்டது. நேற்று காலை 9.50 மணிக்கு திட்டமிட்டபடி மொபைல் லோஞ்சரில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கி அழித்ததாகவும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரையில் இருந்து சென்று 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணையில் 500 முதல் ஆயிரம் கிலோ எடையுள்ள வெடிபொருட்களை நிரப்ப முடியும் எனவும் திரவ எரிபொருளுடன் 2 என்ஜின்களுடன் இது இயங்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.