விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் எதிர்வரும் யூன் 9ம்திகதி முதல் ஜூலை 10ம்திகதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் எவ்வளவு போராடினாலும் அவர்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள் எனவும் தேர்தல் சமயத்தில் பொதுமக்களை முதுகெலும்பாகவும் தேர்தல் முடிந்ததும் பொதுமக்களை அடிமைகளாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
டெல்லியில் ஒருமாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்திய போது முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழையை நம்பி போராட்டத்தினை கைவிட்டதாகவும் எனினும் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் தொடர் போராட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்துக்கு பிறகும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அதே இடத்தில் 100 நாட்கள் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.