கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் திருகோணமலை பெரிய கடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் கிழக்கின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்கும் விதமாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முழுப்பொறுப்பும் பொலிஸாருக்கு உள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.
கிழக்கில் மெல்ல மெல்ல இனவாத செயற்பாடுகளும் இனவாத ரீதியான வன்முறைகளும் தலைதூக்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயக் கடமை பொலிஸாருக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் கிழக்கில் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்து எமது சகோதரத்துவத்தைக் காட்ட வேண்டிய தருணம் என்பதை நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.