Home இலங்கை நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

நல்லிணக்கம் பற்றிய நம்பிக்கைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin
அண்மையில் கிளிநொச்சி நகரில் ஒரு அறிவிப்பு வாகனம் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு நிவாரணங்களைக்  கோரிக் கொண்டு விலத்திச் சென்றது. தெற்கு மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நிவாரணப் பொருட்களை வழங்க முன்வருமாறும் அந்த அறிவிப்பு வாகனம் சொல்லிக் கொண்டு போனது. அந்த தெருவால் போக்குவரத்து செய்த பலரும் அந்த வாகனத்தைப் பார்த்துச் சென்றனர். சிலர் லேசாக புன்னகைத்தபடி சென்றனர். ஆனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் தெற்கில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் வழங்க முன்வந்தனர்.
இலங்கையில் நல்லிணக்கம் என்ற சொல் எத்தனை பேரால் எத்தனை தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பை செய்தால் அதன் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். உலகில் இன்றைய நாட்களில் நல்லிணக்கம் என்ற சொல் அதிகம் புழங்கப்படுவது இலங்கையில்தான். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்த்தான். தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து அவர்களின் தனி ஈழக் கோரிக்கையை தோற்கடித்து தெற்குடன் வடக்கு கிழக்கை நல்லிணக்கமாக்குவேன் என்றே ராஜபக்ச யுத்தத்தில் ஈடுபட்டார்.
தமிழ் மக்களின் தாயக கனவை அழிப்பதே மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்கம் ஆகும்.  விடுதலைப் புலிகளை சிதைத்த போகும் தமிழ் மக்களின் தாயக கனவை ராஜபக்சவினால் அழிக்க முடியவில்லை  என்பதை வடக்கு கிழக்கு தெளிவாக  உணர்த்தியுள்ளது.
உலகில் நல்லிணக்கத்திற்காக யுத்தம் செய்த நாடு இலங்கை. உலகில் நல்லிணக்கத்திற்காக யுத்தம் செய்தவர் ராஜபக்ச. ஒரு இனத்தின் மீது இன அழிப்பு படையெடுப்பை நடாத்தி இரத்தம் சிந்த வைத்து, இனப்படுகொலையைப் புரிந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இலங்கையில்தான் நிகழ்ந்தது. உண்மையில் இலங்கையில் நடந்த யுத்தம் இனங்களுக்கு இடையில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. தமிழ் இனத்தை ஆறாத காயத்தில் தள்ளியது. யுத்தம் என்பது நல்லிணக்கத்திற்கு எதிரானது. அது இனங்களுக்கு இடையில் மேலும் பிணக்குகளையே ஏற்படுத்துகிறது.
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே, மற்றும் சில அரச உயர் அதிகாரிகளே இவ்வாறு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தெற்கிற்கு உதவ வடக்கு தயாராக இருக்கிறது என்று பெருமிதத்துடன் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். உண்மையில் வடக்கு தெற்கிற்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறது. தெற்கிற்காக குரல்  கொடுக்கவும் தயாராக இருக்கிறது. ஆனால் தெற்குத்தான் வடக்கு கிழக்கிற்கு உதவுவதற்கு தயாராக இல்லை என்பதே கவலைக்குரியது.
உண்மையில் தெற்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திர வரலாற்றுக்கு ஆற்றிய பங்ககை புரிந்திருந்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் வரலாற்றில் எத்தகைய சரித்திரத்தை கொண்டவர்கள் என்றும் அவர்கள் தம்மை தாமே ஆள வேண்டும் என்பதை ஏற்றிருந்தால், தமிழ் மக்களின் உரிமையை பகிர முன் வந்திருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியிருக்க நேரிட்டிருக்காது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையை சந்திருக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் ஆறாத காயத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது.
அண்மையில் கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடும் மக்களுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் வடக்கில் நடக்கும் இத்தகைய போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த வடக்கு ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தெல்லாம் விசாரணை நடத்த இயலாது என்று கொஞ்சமும் பொறுப்பின்றி பேசியிருந்தார்.
யுத்தத்தத்தை நடத்திய அரசு, இனப்படுகொலை தொடர்பிலும் மனித குல விரோத போர்க்குற்றம் தொடர்பிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் பதில் அளிக்க  வேண்டிய கடப்பாட்டைக் கொண்டது. சர்வதேச சமூகத்திற்கு, ஐக்கிய நாடுகள் சபையில் நம்பகமான உள்ளக விசாரணையை நடத்துவோம் என்று இலங்கை அரசு இனை அனுசரனை வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. நீதியான, நம்பகமாக சர்வதேச விசாரணையே வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருவது இலங்கையின் இத்தகைய போக்கினாலேயே. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பொறுப்பற்று கைவிரிக்கும் இலங்கை அரசு எவ்வாறு நம்பகமாக உள்ளக விசாரணையை நடாத்தும்?
தமிழ் மக்கள் தென்னிலங்கை மக்களின் துன்பத்தில் மாத்திரமல்ல, எவருடைய துன்பத்தைக் கண்டும் துயரப்படுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் மாபெரும் கண்ணீரை, மாபெரும் குருதியை, மாபெரும் இன அழிப்பை சந்தித்தபோது பாற்சோறு உண்டு, பட்டாசு கொளுத்தி கொண்டாடியவர்களும் இத் தீவில் உள்ளனர். மனிதப் படுகொலைகள் கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இந்த உலகில் எந்த மனிதர்களும் இனத்தின் பெயரால் , மத்தின் பெயரால் சாதியின் பெயரால், வர்கத்தின் பெயரால் அழிக்கப்பட்டாலும் ஈழத் தமிழ் மக்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள். ஏனெனில் அவர்கள் அப்படியொரு வாழ்வையே வாழ்கின்றனர்.
தெற்கிற்கான நிவாரணத்தை வழங்கிய கிளிநொச்சி நகர வர்த்தகர் ஒருவர், நாங்கள் நிவாரணம் கொடுக்க தயாராகத்தான் இருக்கிறம். ஆனால் உந்த நல்லிணக்கம் உதாலை வரும் எண்டு பேக்காட்டுறதைப் பாக்கத்தான் சிரிப்பாய் இருக்குது.. என்றார். இப்போதும் தமிழ் தலைவர்கள் நிறைய விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றனர். சர்வதேச அளவில் ஆதரவை வழங்கியுள்ளனர். இதனால் தமிழ் மக்களின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்கள் ஆளாகி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை.
தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும்சரி, தமிழ் மக்கள் கோரிய வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சித் தீர்வை முன்வைப்பதிலும் சரி, இனப்படுகொலை போர்க்குற்றவிசாரணை செய்வதிலும் சரி என்ன நகர்வை காட்டியிருக்கிறது? தன்னை பாதுகாக்கவும் தனது படையை பாதுகாக்கவுமே இலங்கை காய் நகர்த்தி வருகிறது. இப்படிச் செய்து கொண்டு இன்றைய அரசும் நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. உண்மையில் தமிழ் மக்களையும் அவர்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமையை அவர்களு்ககு வழங்கினாலே நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும்.
ஆனால் இந்த உண்மையை தெரிந்தும் கடந்த காலத்தின் முன்னெடுக்கப்பட்ட அதே அரசியல் நகர்வை முன்னெடுத்துத்துக் கொண்டு நல்லிணக்கம் நல்லிணக்கம் என்பது ஈழத் தமிழ் மக்களை மாத்திரம் ஏமாற்றும் செயலல்ல. சிங்கள மக்களையும் இந்த உலகத்தையும் ஏமாற்றும் கொடுஞ் செயலாகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More