போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தல் விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி யாழில் 4கோடிக்கும் அதிகமான பணத்தினை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கும்பல் ஒன்று யாழ்.மாவட்டத்தின் பல இடங்களை சேர்ந்த வர்த்தகர்கள் 30க்கும் அதிகமானவர்களிடம் யாழ்.மாவட்ட விநியோக உரிமம் தருகின்றோம் என கூறி பல இலட்ச ரூபாய்களை பெற்று மோசடி செய்து வந்துள்ளனர்.
குறித்த நபர்கள் காசுகளை பெற்றுக்கொண்ட பின்னர் தண்ணீர் போத்தல்களை வர்த்தகர்களுக்கு கொடுக்காது ஏமாற்றி வந்துள்ளதுடன் சிலருக்கு கொடுத்த தண்ணீர் போத்தல்கள் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை என கூறி நுகர்வோர் அதிகார சபையால் விற்பனைக்கு தடை செய்யப்பட்டது.
அது தொடர்பில் குறித்த நபர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட போது பலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிலரை வீடுகளுக்கு சென்றும் அக்கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டி உள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி மோசடி கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க முடிவெடுத்ததன் பிரகாரம், புதிதாக ஒருவர் குறித்த நிறுவனத்தின் தண்ணீர் போத்தல் விநியோக உரிமையை பெற விரும்புவதாகவும் , அதற்கான பணத்தை தாம் கைவசம் வைத்துள்ளதாகவும் , அதனை வந்து பெற்றுக்கொள்ளும் படி கூறி மோசடி கும்பலை யாழ்.புறநகர் பகுதிக்கு அழைத்துள்ளனர்.
அதனை நம்பி வந்த மோசடி கும்பலை சேர்ந்த இருவரை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்து நயப்புடைத்த பின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் கையளித்தனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில் , இந்த கும்பல் யாழ். மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் இவ்வாறாக மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. என்னை ஏமாற்றியது தொடர்பில் இந்த கும்பலுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது என்னை மிரட்டி இருந்தனர். அதே போன்று மற்றுமொரு நபர் இவர்கள் கொடுத்த விலாசத்திற்கு தேடி சென்ற போது அவரை இவர்கள் கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதுடன் , குடும்பமாக கொலை செய்வோம் எனவும் அச்சுறுத்தினர் என தெரிவித்தார்.