கடந்த சில தினங்களின் முன்னர், முல்லைத்தீவின் நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் இலட்சக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கரையொதுங்கியமைக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட வெப்பநிலை அதிகரிப்பே காரணமென நாராவின் சூழல் ஆய்வு பிரிவின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.
மீன்களின் உயிரிழப்பு குறித்து தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான நாரா மேற்கொண்ட ஆய்வினை மேற் கொண்டுள்ளது. முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, நந்திக்கடலின் வட்டுவாகல் பகுதியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் களப்பு பகுதியிற்கும் கடலுக்குமான தொடர்பு துண்டிக்கப்படவே, கடல் நீருடன் நதி நீர் கலக்கும் போது உருவாகும் ஒக்சிஜனின் அளவு அதிகமாகி நீரின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு நாராவின் சூழல் ஆய்வு பிரிவின் தலைவர் எஸ்.ஏ.எம். அஸ்மி தெரிவித்துள்ளார்.
அத்தோடு தொடர் வறட்சியில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு பகுதியில் இடையில் பெய்த மழை காரணமாக கடலுக்கு அடித்துவரப்பட்ட கழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இரசாயன தாக்கத்தினாலேயே மீன்கள் இறக்க நேரிட்டதாக தெரிவித்தார்.
குறித்த நந்திக்கடல் வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் காணப்படும் மணல் மேடானது, கடலுக்கும் களப்பு பகுதிக்குமான தொடர்பை தடுப்பதாகவும், இதனால் குறித்த மணல் மேட்டு பகுதியை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.