183
அனர்த்ததில் உயிரிழந்தவர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 94ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது தெற்கில் இடம்பெற்ற அனர்த்ததில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
அதேவேளை வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை குழுவின் அறிக்கை நாளைய தினமே சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அதன் போது வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணை குழு தனது அறிக்கையை கடந்த மாதம் முதலமைச்சரிடம் கையளித்துள்ளது.
அந்த அறிக்கை இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் முதலமைச்சர் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறும் மரண சடங்கில் கலந்து கொள்ள சென்றமையால் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
அதனால் நாளைய விஷேட அமர்வு நடைபெறும் எனவும் அதன் போது முதலமைச்சர் சபையில் விசாரணை குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பார் என அவைத்தலைவர் தெரிவித்தார்.
வடமாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டார்கள் எனவும், அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் குறித்த விசாரணை குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது என நேற்றைய தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love