பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். பிரபல நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதலாளி சுத்தியலால் தாக்கி உள்ளதோடு, தொடர்ந்தும் காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார். தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு இலக்காகி உள்ளாகிய நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுள் கொண்டு வருவதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் அவர் காயங்களுடன் உயிருடன் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவ்விடத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் பொலிசார் தடுத்துள்ளதோடு, சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி தேவாலயத்தின் உள்ளே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த தாக்குதலாளியின் நோக்கம் என்ன? அவர் தனித்துச் செயற்பட்டாரா அல்லது வேறு சகபாடிகளும் இருந்தார்களா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து நோர்த் டாம் தேவாலயப் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் மக்களும் அங்கு செல்வதனை பொலிசார் தடுத்துள்ளனர்.