175
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கும் நல்லாட்சி அரசாங்கம் வழி வகுக்கும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாகக் கரைந்து கொண்டிருக்கின்றது.
அதேவேளை, இப்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையின் நிலை என்ன, அது தொடர்ந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முறையில் செயற்பட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்றன. இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்திருப்பதனால், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இதைவிட நல்லதொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்கமாட்டாது என்று பலரும் நம்பினார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும்தான் இந்த நாட்டின் இரண்டு முக்கிய தேசிய அரசியல் கட்சிகளாகும். இவை இரண்டும் தான் மாறி மாறி நாட்டில் அரசோச்சி வந்துள்ளன.
ஆட்சியில் இருக்கின்ற ஒரு கட்சி, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முற்பட்டால், சிறுபான்மை இன மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்கு முடிவு எத்தனித்தால் – உடனே எதிர்க்கட்சியாக இருக்கின்ற அடுத்த முக்கிய தேசிய கட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த முயற்சியை முறியடித்துவிடும். இதுவே காலம் காலமாக நடைபெற்று வந்த அரசியல் வரலாறாகப் பதிவாகியிருக்கின்றது.
ஒரு கட்சி விரும்பினால் மற்ற கட்சி அதனை எதிர்ப்பதையே நிரந்தரமானதோர் அரசியல் போக்காக இந்த இரண்டு கட்சிகளும் கடைப்பிடித்து வந்திருக்கின்றன.
இத்தகைய அரசியல் போக்கில், இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில், அரசியல் தீர்வு காண்பதற்கும் சிறுபான்மை இன மக்கள் எதிர்நோக்கியுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவு காண்பதற்கு மேற்கொள்கின்ற முயற்சி பலனளிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே சிறுபான்மை இன மக்களின் வாக்குகளின் மூலம், நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் தோல்வியுற்று ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற முடியாமல்போன முன்னாள் ஜனாதிபதியின் தலைமையிலான சுதந்திரக் கட்சி குழுவினர் நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவி இழக்கச் செய்வதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக இந்தக் குழுவினர் மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகளும், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களும் சிங்கள மக்கள் மத்தியில் ஓர் எழுச்சிப் போக்கை உருவாக்க முனைந்திருக்கின்றன. இது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தைக் கேள்வி குறிக்கு உள்ளாக்கும் அளவுக்குப் படிப்படியாகத் தீவிரம் பெற்று வருகின்றது.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்;தி சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மகிந்த ராஜபக்ச அணியினருக்கு ஆதரவான சிங்கள மக்களின் எழுச்சிப் போக்கானது பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற வகையில் ஆதரவு வழங்கியுள்ள போதிலும், அது எதிர்நோக்கியுள்ள தென்பகுதி சார்ந்த அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதிருக்கின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் கூறப்படுகின்றது.
இன்றைய அரசியல் நிலைமை அதுவாகவே இருந்தாலும்கூட, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எந்த வகையில் நிறைவேற்றப்படப் போகின்றது? அவற்றை நிறைவேற்றுபவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டிய கட்டாய நிலைமையும் தோன்றியிருக்கின்றது.
தேர்தல்களில் சரிந்திருந்த மகிந்த ராஜபக்சவின் அரசியல் செல்வாக்கு நாட்டின் தென்பகுதியில் சிங்கள மக்கள் மத்தியில் இப்போது தலைதூக்கத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, அதனைச் சீர் செய்து, தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அரசாங்கம் அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஆயினும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கத்தினால் எழுந்துள்ள வாழ்க்கைப் பிரச்சினைகள், மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிவில் பொதுமக்கள் பலியாகியமை, கலகொட அத்த ஞானசார தேரரின் அத்துமீறிய இனவாத மதவாத கருத்து வெளிப்பாட்டுச் செயற்பாடுகள், அதனால் எழுந்துள்ள இனங்களுக்கிடையில் எழுந்துள்ள வெறுப்பு மற்றும் முரண்பாடான நிலைமைகள் என்பன அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
போதாக்குறைக்கு முற்றிலும் எதிர்பாராத வகையில், எதிர்பாராத பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதனால் ஏற்பட்டுள்ள பேரழிவுகள் என்பனவும் அரசுக்குத் தலையிடியாக மாறியிருக்கின்றன.
தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவே போராட வேண்டிய அரசாங்கம், சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கைப் பலமிழக்கச் செய்யும் சக்தி வாய்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாத நிலைக்குள் சிக்கியிருக்கின்றது. அதாவது, சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தீவிரமாகக் கவனம் செலுத்தவோ அல்லது அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதனால் மக்கள் மத்தியில் படிப்படியாக செல்வாக்கை இழக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றது. இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குப் பதிலாக மாற்றுத் தலைமையொன்றை நாட வேண்டியதொரு சூழலுக்குள் தமிழ் மக்களைத் தள்ளியிருக்கின்றது.
பல அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, இறுக்கமான ஒரு கட்டமைப்பின் கீழ் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து, தன்னையொரு வலுவான அரசியல் அமைப்பாக மாற்றிக்கொள்ளத் தவறியிருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் வலுவுள்ளதாகத் திகழ்ந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுதக்கத் தக்க நடவடிக்கைகள் சிலவற்றையாவது, கூட்டமைப்பினால் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
முக்கியமாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னம், சிவில் செயற்பாடுகளில் அவர்களின் தலையீடு, குறிப்பாக இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணி மீட்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அரசாங்கம் பொறுப்பேற்கத் தவறியிருப்பது, விடுதலைப்புலிகளை யுத்தத்தில் தோற்கடித்த அரசாங்கம் வெற்றிவிழா கொண்டாடுகின்ற அதே வேளை, அந்த யுத்தத்தில் பலியாகிப் போன பொதுமக்களுக்கு கூட்டு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட இடமளிக்காத அரசாங்கத்தின் போக்கு, பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினையில் கையாளப்படுகின்ற இழுத்தடிப்பான போக்கு என்பன போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லையே என்ற ஆதங்கம், அரசாங்கத்தைவிட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் அதிருப்தியடையவும் நம்பிக்கை இழக்கச் செய்யவும் வழிகோலியிருக்கின்றது.
வலுவானதோர் அரசியல் கட்சிக்கு நிகராக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைக் கட்டியெழுப்பத் தவறியமையும், ஒரு கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில் செயற்பட முடியாமல் போயுள்ளமையும், கூட்டமைப்புக்குள்ளே முரண்பாடுகள் பெருகுவதற்கு காரணமாகிப் போயின. கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளுடன் விடயங்களைக் கலந்துரையாடி, கூட்டுப் பொறுப்புடன் செயற்படாத தன்மையே, கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுவதற்கு வழிகோலியிருந்தது.
தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அரசியல் அமைப்பு அவசியம் என்ற தேவை இப்போது வெகுவாக உணரப்பட்டு வருகின்றது,
தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் தன்னிச்சையான போக்கில் அதிருப்தியடைந்து, துணிந்து கருத்துக்களை வெளியிட்ட தரப்புக்கள் இந்த மாற்றுத்தலைமை குறித்து தீவிரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கியிருக்கின்றன.
இத்தகைய போக்கிலேயே ஏற்கனவே, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் விடயங்களைக் கையாள்வதில் மக்களுடைய எதிர்பார்ப்பையும், அதிருப்தியாளர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களையும் தமிழ் மக்கள் பேரவையினால் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது.
அரசியலில் ஈடுபடப் போவதில்லை. அரசியல் கட்சியாகச் செயற்படப் போவதுமில்லை என்ற நிலைப்பாட்டோடு உருவாகிய போதிலும், தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு ஒரு மாற்று அரசியல் தலைமையாக, மாற்று அமைப்பாகவே பலராலும் நோக்கப்பட்டது. இதனால் அதிக அளவில் வாதப் பிரதிவாதங்கள், கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன.
ஆனால் தமிழ் மக்களுக்குத் தேவைப்பட்ட வலுவான செயல் வல்லமை கொண்டதோர் அரசியல் கட்டமைப்பாக, தமிழ் மக்கள் பேரவை தன்னை, புடம்போட்டுக் கொள்ளவில்லை.
அத்தகைய அரசியல் நோக்கம் பேரவைக்கு இருக்கவில்லையே என்ற வாதம் முன்வைக்கப்பட்டாலும்கூட, மக்களின் எதிர்பார்ப்;பை நிறைவேற்றி, தமிழ் அரசியலில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை, நிரப்புவதற்கு, தமிழ் மக்கள் பேரவையினால் முடியாமல் போய்விட்டது,
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அரசியல் ரீதியாகக் கையாள முடியாமல் போயிருந்தாலும்கூட, அரசியல் பிரச்சினைகளாகவும், அரசியல் விவகாரங்களாகவும் விசுவரூபமெடுத்துள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை ஒரு பொது மேடையில் சீராகக் கையாள்வதற்கான வழிகாட்டலைக்கூட, பேரவையினால் வழங்க முடியாமல் போயிருக்கின்றது.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடய விடயம், இராணுவத்திடமிருந்து பொதுமக்களின் காணிகளை மீட்பது, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை அடிப்படை உரிமை ரீதியில் நினைவுகூர்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவது போன்ற விடயங்களில் முறையான துறைசார்ந்த வகையில் வழிகாட்டல் செயற்பாடுகளைக் கூட பேரவையினால் முன்னெடுக்க முடியாமல் போயிருக்கின்றது.
அத்தகைய ஒரு நிலைமையிலும்கூட,; இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீடற்றவர்களுக்கான வீடமைப்புத் திட்டச் செயற்பாடுகள் என்பவற்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது தான் கொண்டுள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காட்டத் தவறிவிட்டது.
அத்துடன், 2016 ஆம் ஆண்டு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கையூட்டி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருடைய கூற்று எதிர்பார்த்த வகையில் வெற்றிபெற தவறிவிட்டது. இவை எல்லாமே தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமை மீதான நம்பிக்கையை தளரச் செய்திருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசாங்கம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் மந்த கதியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக காணாமல் போனோருக்கான செயலகத்தைச் செயற்படுத்தல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்;குதல் போன்ற முக்கியமான விடயங்களைக் கையாள்வதிலும் அரசாங்கம் நம்பிக்கையூட்டத்தக்க வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
அரசாங்கத்தின் இந்தப் போக்கு, அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையே அதிருப்தியடைந்து கருத்துக்களை வெளியிடும் அளவுக்கு நிலைமையை மோசமடையச் செய்திருக்கின்றது.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே, மாற்றுத் தமிழ் அரசியல் தலைமையொன்று அவசியம் என்ற தேவை அதிகமாக உணரப்பட்டிருக்கின்றது. மாற்றுத் தலைமையென்று கூறும்பொழுது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சரியான வழியில் செயற்படச் செய்வதற்குத் தூண்டத்தக்கதோர் அரசியல் தலைமையே தேவை என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.
அதேநேரம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு மாறாக அதனை ஈடு செய்யத் தக்க வகையில், தமிழ் மக்களுடைய அரசியல் விடயங்களைக் கையாள்வதற்கும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் வலுவான ஒரு மாற்றுத் தலைமை அவசியம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இத்தகைய இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்ட கருத்தியல் சூழலிலேயே தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் தலைமை குறித்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்து விவாதித்து வருகின்றார்கள். இதன் ஆரம்ப கூட்டம் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் கசிந்திருந்தன.
மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப கூட்டம் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்ற இறுக்கமானதொரு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதனையும் மீறி அந்தத் தகவல் ஊடகங்களுக்குக் கசிந்திருந்தது. ஆயினும், இந்த முயற்சிக்கான அடுத்தடுத்த சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.
தற்போதுள்ள நிலைமையில் பல்வேறு விடயங்களை விவாதித்துள்ள இந்த மாற்றுத் தலைமைக்கான முயற்சியில், புதிய அமைப்புக்கான யாப்பு ஒன்றைத் தயாரிக்கின்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது.
இருந்த போதிலும், இந்த மாற்றுத் தலைமையை ஓர் அரசியல் கட்சியைப் போன்ற அமைப்பாக உருவாக்குவதா அல்லது ஓர் அரசியல் குழுவாகக் கட்டியெழுப்புவதா என்பது தொடர்பான விவாதங்களில் இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வில்லை என்றே தெரிகின்றது.
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் நாடாளுமன்ற அரசியல் செயற்பாடுகளுக்காகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் பயன்படுத்தி வந்திருந்தனர். அரசியல் தீர்வு காணும் முயற்சியில் – அது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உள்ளடக்கி அவர்கள் செயற்படவில்லை.
தமிழ் மக்களுடைய அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஓர் அலங்கார அரசியல் அணியாகவே வைத்திருந்தனர். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் விடுதலைப்புலிகளே ஏகபோக உரிமையில் கையாண்டிருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே, 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது தோளில் சுமக்க நேர்ந்தது.
அதன் பின்னரான கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் தமிழ் மக்களுடைய அரசியல் தலைமை என்ற வகையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பயனளிக்கத் தக்க வகையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள், சாதனைகள் என்று எதனையும் பெரிய அளவில் குறிப்பிட்டு கூறத்தக்கதாக இல்லையென்றே கூற வேண்டியிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஐநா மன்றத்திற்குக் கொண்டு சென்றோம், பொறுப்பு கூறுதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற விடயங்களில் அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் அழுத்தத்தைக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது என்று பல விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் கூறலாம்.
ஆயினும் பாதிக்கப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் இன்னும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, குறைந்திருக்கின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் செயலளவில் முன்னேற்றம் காணப்படுகின்றது. கூடிய விரைவில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுவிடும் என்று துணிந்து கூறத்தக்க நிலைமை இன்னும் உருவாகவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
எனவே, இன்றைய அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையானது, அரசாங்கத்திற்கு எந்த வகையில் அழுத்தங்களைப் பிரயோகித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தச் செய்ய முடியும் என்பதில் ஒரு தேக்க நிலையிலேயே காணப்படுகின்றது.
இத்தகைய ஒரு நிலையில் செயல் வல்லமைகொண்டதோர் அரசியல் தலைமை உருவாகுமா என்பது தெரியிவில்லை. அல்லது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையை செயல் வல்லமை கொண்டதாகச் செயற்படுவதற்குத் தூண்டத்தக்கதோர் மாற்றுத் தலைமை உருவாகுமா என்பதும் தெரியவில்லை.
Spread the love