உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட்டு அச்சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய சமுத்திர வலய நாடுகளின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவினருடன் நேற்று முன்தினம் தினம் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். ஆகவே புதிய முறையில் தேர்தல் நடத்துவதாக இருந்தால், சிறுபான்மை கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட்டே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது உடனடியாக சாத்தியமில்லாவிட்டால் பழைய முறைமையிலாவது உள்ளுராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதும், அதன் பின்னர் இனங்களுக்கிடையே நம்பிக்கையையும், ஐக்கியத்தையும் வளர்த்தெடுப்பதற்கு ஏற்றவகையில் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. எதிர்காலத்திலாவது நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ளவகையில் சகல இனங்களுக்குள்ளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்