வெயில் கொடுமையில் யூஸ் வாங்கிக் குடித்துவிட்டு வெறும் போத்தலை வீதிக்கு அருகில் எறிந்துவிட்டு வந்தான் எனது நண்பன் சசி. நானோ ‘அங்கே இந்த இடத்தில் குப்பை போடக் கூடாது என்று போட் எழுதிப் போட்டிருக்குது உனது கண் எங்கே பிடரிக்கேயே இருக்குது’ என்று கேட்டேன். அதற்கு அவனோ ‘யாழ்.நகரில எல்லா இடமும் தான் குப்பை போடக் கூடாது என்று போட் போட்டிருக்கிறார்கள். பிறகு நாங்கள் எங்க குப்பை போடுறது அதனாலை தான் குப்பை போடக் கூடாது என்று எழுதிப் போட்டிருக்கிற இடத்திலேயே வெறும் போத்தலை எறிந்து விட்டேன்’ என்று இடக்கு மிடக்காய் பதில் சொன்னான். இவனோட என்னத்தைக் கதைக்கிறதென்று வந்துவிட்டன்.
இப்பத்த காலத்தில பார்த்தியல் என்றால் எல்லாமிடமும் வாசகத்தை மட்டும் எழுதி பார்வைக்கு விட்டிருக்கிறார்கள். கண் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்பியல் கேள்வி கேட்பதில் மட்டும் நீங்கள் கில்லாடிகள் பாருங்கோ. ஆசுப்பத்திரி கோயில் குளம் பாடசாலை சிறுவர் பூங்கா நீதிமன்றம் தியெட்டர் பொது இடங்கள் போன்ற எல்லாமிடமும் ஒரு இடமும் மிஞ்சாமல் நடைமுறையை எப்படி நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற வாசகங்களை எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதற்காக இடங்களையும் ஒதுக்கியிருக்கிறார்கள். என்ன பம்பல் என்றால் இந்த வாசகங்களை எழுதினவர்களே இந்த வாசகங்களுக்கேற்ப நடந்து கொண்டதில்லை. இது தான் வேடிக்கையான விடயம்.
அன்பாகப் பேசுங்கள்–கல்வி எல்லோருக்கும்–அமைதியைப் பேணுங்கள்–சுத்தம் சுகம் தரும்–போன்ற வாசகங்களை எல்லா இடங்களிலும் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது. அந்தந்த இடங்களில் நடைமுறை தெரியாதவர்கள் வாசகங்களைப் படித்து நடந்து கொள்ளவா அல்லது நடைமுறை தெரிந்தும் வேணுமெண்டு நடப்பவர்கள் இதனை பின்பற்றி நடந்து கொள்ளவா எவருக்காக இந்த வாசகங்கள்? நடைமுறையை எழுதிப் போட்டாலும் பின்பற்றத் தயாரா? போகப் போகச் சரி வரும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் சரிவந்ததில்லை. சரிவர எவர் விடுவார். துளைவார் போட்ட பிளாஸ்ரிக் போத்தல்களை எண்ணக்கணக்கின்றி ஆரியக் குளத்தில் அள்ளுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் தேசிய ரீதியிலான ஒரு கல்லூரியின் வாசலில் ஆசிரியத்துவத்தை மதிப்பவர்கள் உள்ளே நுழைவார்களாக என்று புதிதாக மரப் பலகையில் வாசகம் எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த வாக்கியத்தை ஆசிரியத்துவத்தை மதிக்காத ஆசிரியர்கள் வெளியே போகவும் என்று மாற்றி எழுதியிருந்தால் ரொம்பப் பொருத்தமாக இருந்திருக்கும் பாருங்கோ. ஆசிரியத் தொழிலை மேற்கொள்பவர்கள் முதலில் இந்தத் தொழிலின் தார்ப்பரியம் பற்றி அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஆசியர்கள் மாணவர்கள் என்ற நிலை மேலோங்கும். இந்த விடயம் தெரியாதவர்களால் பல பிரச்சினைகளை இந்த சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. அதாவது ஆசிரியத்துவத்தை எல்லோரும் மதிப்பார்கள் அதை எழுதி வாசலில் தொங்கவிட வேண்டிய தேவை என்ன?
ஆரம்ப காலங்களில் ஒரு ஊருக்கு ஒரு வாத்தியார் இருந்த போது கல்வி மட்டுமல்ல ஒழுக்கமான பண்பாடும் மேலோங்கி இருந்தது. இன்றைய காலம் வீட்டுக்கு ஒரு ஆசிரியர் இருக்கின்ற போதும் கல்வி மட்டுமல்ல ஒழுக்க பண்பாடும் கீழ் இறங்கிவிட்டது. என்ன காரணம் வாசகம் போல் இவர்களும் இருப்பதால் தான் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஆசிரியர்கள் தான் காரணமாக அமைய முடியும். ஏனெனில் நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களாலே மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் போது எப்படி மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்க முடியும்..
மாணவன் மாணவிக்கு லவ் லெட்டர் கொடுக்கிற காலம் போய் சில வாத்திமார் மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுக்கிற காலமாகி விட்டது. மாணவன் கொடுப்பதைவிட வாத்தியார் கொடுப்பது ஈசி பாருங்கோ. அதனால் தான் என்னவோ வாத்தியாற்றை வொர்க்அவுட் ஆகுது. இந்த வொர்க்அவுட்டாலை வாத்தியார் எத்தனை மாணவிகளுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை. அதனால் தான் நான் சொல்லுறன் பாருங்கோ ஆசிரியத்துவத்தை மதிக்காதவர்கள் வெளியே போங்கள் என்று. அப்பொழுது தான் ஆசிரியத்துவத்தை மதிப்பவர்கள் உள்ளே வருவார்கள். இது தெரியாத எல்லாரும் வாசகம் எழுதத் தொடங்கிவிட்டனர்.