யாழில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தமிழ் ஊடக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை கடந்த மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்தார். அதற்கு அமைவாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு, யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் சம்பந்தமான கூட்டம் நடைபெறும்.இதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.